“பாஜக டைரக்‌ஷனில் இபிஎஸ் கள்ளக் கூட்டணி நாடகம்!” – திருச்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி: “தேர்தல் என்பதால், பிரதமர் இப்போது இந்தியாவிலேயே இருக்கிறார். எனவேதான், அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். இல்லையென்றால் பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகி விட்டதால், திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மையாகவே, தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்பதால், பிரதமர் மோடிக்குதான் தூக்கம் வரவில்லை” என்று திருச்சியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: “பாசிச பாஜகவை வீழ்த்தி, இண்டியா கூட்டணியின் ஆட்சியை மத்தியில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல்.

தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், திமுகவினருக்குத் தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியபோகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும், கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது!

சரி, தமிழகத்துக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை. இனி வந்தாலும், சொல்லவும் முடியாது. பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழகத்துக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா? இவர் நம்மை விமர்சிக்கிறார். இப்போது நான் சொல்கிறேன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக, மக்களாகிய உங்களுக்காகச் செய்த சாதனைகளின் பட்டியல் சொல்லவா? சொன்னால் இன்றைக்கு ஒரு நாள் போதாது.

தமிழகத்தில் சொல்வதற்கென்று, எதுவுமே இல்லாத ஆட்சியை நடத்தியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை. மேடைக்கு மேடை என்ன சொல்கிறார், பத்தாண்டு நான் ஊழலற்ற அரசாங்கத்தை நடத்தினேன் என்று சொல்கிறார். பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி, நாம் மட்டுமல்ல நாடு முழுவதும் கேள்வி கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

இந்தப் பத்தாண்டு ஆட்சியில், ஊழல்கள் ஒன்றா – இரண்டா, அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான் இந்திய ஜனநாயகத்துக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல். கடந்த 5 ஆண்டுகளில் ED, IT,CBI இப்படிப்பட்ட மத்திய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாகப் பயன்படுத்தி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பாஜகவுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள்.

வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை. அதுமட்டுமா, சிஏஜி அறிக்கையில் வந்ததே, பாரத்மாலா திட்ட ஊழல், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்ட ஊழல், சுங்கச்சாவடி கட்டண ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல், ஓய்வூதியத் திட்ட ஊழல், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்ட ஊழல் என்று 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கை மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, அது பற்றி வாய் திறக்கவில்லை. தேர்தல் பத்திரம் போலவே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பேர் வைத்து வசூல் செய்திருக்கிறார். அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்.

அதேபோல், ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசலாமா? பாஜக ஊழல்களை மறைக்க, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? பாஜகவின் தோல்வி பயம்தான் ஒரே காரணம்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்து, 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். சென்ற மாதம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுகிறார். இப்போது அரவிந்த் கேஜ்ரிவால், அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா இது? தனக்கு எதிராக ‘இண்டியா’ என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து விட்டார்களே, மக்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்களே என்ற பயத்தில், தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது, பாஜக தலைமை!

தமிழகத்தில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு முன்பாக, நம்முடைய அமைச்சர் பொன்முடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நான் வந்திருக்கிறேன். ஆளுநர் அவராகச் செய்தாரா? முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா? திமுகவினர் நாங்கள். நீதிமன்றத்துக்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்தில் வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி!

அதற்குப் பிறகு, இன்றைக்கு மாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப் பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன். அவர் உடனே, ”BEST OF LUCK” என்று சொல்லி அனுப்பினார். ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத் தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்துவார். நாம் ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். நேற்றும், இன்றைக்கும் போல், வரலாற்றில் வேறு எந்த ஆளுநரையாவது நீதிமன்றம் இப்படி கடுமையான கேள்விகள் கேட்டிருக்கிறதா? அப்படிப்பட்ட கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. மக்களை எதிர்கொள்ள பயப்படும் பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம்!

உங்களின் இந்த மிரட்டல் உருட்டல் அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது இண்டியா கூட்டணிக்கும் பாஜகவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய நாட்டு மக்களுக்கும் பாசிச பாஜகவுக்குமான யுத்தம். இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாசிச பாஜக வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். இந்திய மக்கள் இப்போது இண்டியா கூட்டணியின் பக்கம் அணி திரண்டுவிட்டார்கள். பிரதமர் அவர்களே, இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி என்று ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் செய்தி உங்கள் தூக்கத்தைத்தான் தொலைக்கப் போகிறது.

நான் கேட்பது, தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழர்களின் மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? தமிழகத்துக்கு விரோதமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு, தமிழ்தான் மூத்தமொழி என்று பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்க கொடுத்த நிதி எவ்வளவு? தமிழ் வளர்ச்சிக்குக் கொடுத்த நிதி எவ்வளவு? இதை கூச்சமில்லாமல் தமிழகத்துக்கு வந்து கூறுவாரா அவர்? நீங்கள் வளர்க்கின்ற வெறுப்புத் தீ என்ன செய்கிறது என்று தெரியுமா? மத்திய பாஜக அமைச்சர் ஒருவர், பெங்களூரில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று சொல்கிறார். தமிழர்களை வன்முறையாளர்களாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப் பார்க்கிறது பாஜக.

தமிழக மக்களை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி பேசலாம் என்பதில்தான், பாஜகவை சேர்ந்தவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கிறது. பாஜக மக்களிடமிருந்து சுரண்டுமே தவிர, மக்களுக்கு எதுவுமே தராது. அதனால்தான், மக்கள் இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும்போது, நம்முடைய நிதியில் இருந்தே நாம் தருகிறோம். அதையும் மனச்சாட்சியே இல்லாமல் கொச்சைப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல்?

தமிழகத்திலிருந்து ஏராளமான நிதியை வரியாக வசூல் செய்கிறீர்கள். அதிலிருந்து நியாயமான பங்கை ஏன் திருப்பிக் கொடுப்பதில்லை என்றுதானே கேட்கிறோம். ஒரு ரூபாய் வசூல் செய்துவிட்டு, 29 பைசா மட்டும் திருப்பி கொடுப்பது நியாயமா? முறையா? தருமமா? என்று கேட்கிறோம். இதைக் கேட்டால், சில நாட்களுக்கு முன்னால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகச் சொல்கிறார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சையாம். எவ்வளவு ஆணவம். எவ்வளவு வாய்க் கொழுப்பு. நிர்மலா சீதாராமன், உங்கள் அரசியலுக்காக தமிழக மக்களை கொச்சைப்படுத்துவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா? மக்களுக்குக் கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை.

மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது, அரசியலில் இருக்கும் நம்முடைய கடமை. அந்தக் கடமையைத்தான் திமுக அரசு சரியாக செய்துகொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே, தொழிலதிபர்கள் கூட்டத்தில் சென்று இப்படி பேசுவீர்களா? ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட வரி கட்டுகிறார்களே மக்கள், அவர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதி அமைச்சர் பதவி?

பாஜகவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய இந்த ஆணவம்தான் பாஜகவை வீழ்த்தப் போகிறது. இப்படிப்பட்ட எதேச்சாதிகார, சர்வாதிகார பாஜகவைத் தமிழகத்தில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி. அவரின் இருண்ட கால ஆட்சியை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டு இருப்பீர்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை, மர்ம மரணங்கள், பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம். ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்து, பாஜகவுக்கு பாதம் தாங்கியாக இருந்து, பாஜக தமிழகத்துக்குச் செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி.

இப்போது அதே பாஜகவின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷனில் கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். பாஜகவின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும். இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய இந்திய நாட்டையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டின் பன்முகத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் காப்பாற்ற முடியும்.

இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். புதிய ஆட்சியை மத்தியில் அமைப்போம். ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம். ஏப்ரல் 19-ஆம் நாள் நீங்கள் அளிக்கின்ற வாக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் வாக்காக அமையட்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.