பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

சென்னை: பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வருடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். எளிமையாக நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பொன்முடிக்கு மீண்டும் அவர் வகித்து வந்த உயர் கல்வித் துறையையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது . அது தொடர்பான ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 22) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், தமிழக முதல்வர், மார்ச் 13 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, க.பொன்முடிக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அக்கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு: முன்னதாக, பொன்முடி பதவியேற்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு கூறியவை: “ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஆனால், அதை இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சத்தம்போட்டு கூற விரும்பவில்லை. ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஒருதண்டனையை நிறுத்தி வைக்கும்போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா.

மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றாவிட்டால், மாநில அரசு என்ன செய்யும். ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்.

முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்” என்றது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.