Rebel Review: கேரளாவில் படிக்கும் தமிழ் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்; படமாகச் சரியான பார்வைதானா?

மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட பலருக்குப் பாலக்காட்டிலுள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அங்கே செல்லும் தமிழ் மாணவர்களான இவர்களுக்கு எஸ்.எப்.ஒய் (S.F.Y) மற்றும் கே.எஸ்.கியூ (K.S.Q) என்ற கேரளக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களால் ரேகிங், சாதிய, இனக் கொடுமைகள் நடக்கின்றன. இதனைச் சமாளிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே `ரெபல்’ படத்தின் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜி.வி.பிரகாஷின் அம்மா கதாபாத்திரம் ஒரு கனமான தேயிலை மூட்டையினை அவரது தலையில் தூக்கி வைப்பார். அதை அவர் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வார். படத்தின் இயக்குநரும் அப்படியொரு கனமான பாத்திரத்தைத்தான் ஜி.வியின் தலையில் ஏற்றியுள்ளார். தட்டுத்தடுமாறி சண்டைக் காட்சிகளில் கரைசேர்ந்தாலும், நடிப்பில் முந்தைய படங்களிலிருந்த அதே ஒற்றை எக்ஸ்பிரஷன் பிரச்னையால் நம்மைச் சோதிக்கிறார். அப்பாவி டெம்ப்ளேட் நாயகியாக ‘பிரேமலு’ மமிதா பைஜூ. மலையாள வில்லன்களாக வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரஹீம் மிரட்டல் உருட்டலுடன் வருகிறார்கள். இதில் வெங்கிடேஷ் மட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்துள்ளார். நாயகனின் நண்பராக வரும் ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் செயற்கைத்தனம் ஓவர்லோடு! இவர்கள் தவிர கருணாஸ், சுப்பிரமணிய சிவா ஆகியோரும் வந்துபோகிறார்கள்.

Rebel Review

ஜி.வி.பிரகாஷ், சித்து குமார், ஆஃப்ரோ இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. “ஆர்.இ.பி.இ.எல்” என்று ‘ரெபல்’ வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவது போல வரும் பின்னணி இசை நமது காதை பதம் பார்க்கிறது. படத்திலுள்ள ஸ்லோமோஷன் காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தால் இன்னும் அரை மணிநேரத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம். அந்த அளவுக்கு அந்த ஷாட்கள் ஓவர்டோஸாகி இருக்கின்றன. தேவையில்லாமல் தலைகீழாக இருந்து கேமராவைச் சுற்றுவது, மஞ்சளும், சிவப்பும் அதிகமாக வருவது போன்ற சறுக்கல்கள் தாண்டி ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு ஓகே ரகம். குறைவான வெளிச்சத்தை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஷாட்கள் மட்டும் கவனம் பெறுகின்றன.

படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணனின் கத்திரி பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் பில்டப் காட்சிகளின் மீது அதீத கருணை காட்டியுள்ளது. அதேபோல நீண்டு கொண்டே செல்கிற இரண்டாம் பாதியை இன்னும் சுருக்கியிருக்கலாம். தனியாக இருக்கும் விடுதி, அதிலுள்ள ஓவியம், தேர்தல் பிரசார ஓவியங்கள் எனக் கலை இயக்குநர் பாப்பாநாடு சி.உதயகுமார் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் வரலாற்றைச் சொல்வதாக அனிமேஷன் காட்சிகளில் ஆரம்பிக்கிறார்கள். அதில் எடுத்த உடனே மொழிவாரி மாநிலமாகப் பிரிப்பதற்கு முன்பு இந்தியா மூன்று மாகாணங்களாக இருப்பதாகப் பிழையுடன் ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் அப்போது 11 மாகாணங்கள் இருந்தன.

மலையாள மாணவர்களால் தமிழ் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமை, சண்டை, நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் காதல் பாட்டு, மீண்டும் சண்டை என்பதாக யூகிக்கக்கூடிய திரைக்கதையிலேயே காட்சிகள் நகர்கின்றன. ஆதித்யா பாஸ்கர் கதாபாத்திரத்தைப் பார்த்தவுடனேயே அவரின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. அதேதான் இறுதியிலும் நடக்கிறது.

Rebel Review

படத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவரும் தமிழர்களாகவும், நாயகியைத் தவிர்த்து அனைத்து மலையாளிகளும் பிரச்னைக்குரியவர்களாகவும் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். அப்படி நல்லவராகக் காட்டப்பட்ட நாயகியும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கான நியாயத்தைக் கண்டும் காணாமல் செல்வதாகக் காட்சிகள் நகர்கின்றன. “தமிழ்ப் பாட்டுத் தமிழ்ப் பாட்டுதான்”, “தமிழ் அடையாளம்தான் வேட்டி சேலை”, “தமிழனோட வீரம் என்னன்னு காட்டணும்” என எதற்காக இந்த வசனங்கள் வருகின்றன, கதையின் அந்த இடத்தில் அதற்கான தேவை என்ன என்பது விளங்கவில்லை. ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்பைப்போல இல்லை’ என ஒட்டுமொத்தமாகப் போகிற போக்கில் தனது முன்முடிவுகளை எல்லாம் வசனமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ் கே.எஸ். அதேபோல “நீல சட்டை கூட போடவிடாத அப்பனோட பையன் இப்ப சிவப்ப எதிர்க்கிறான்” என்ற வசனமெல்லாம் ஏன் இடம்பெற்றிருக்கின்றன என்பது அவருக்கே வெளிச்சம்.

ஒரு காட்சியில் ரேகிங் பிரச்னை, அடுத்த காட்சியில் சாதிப் பிரச்னை, அதற்குத்தடுத்த காட்சிகளில் இனப்பிரச்னை, மொழிப் பிரச்னை என இயக்குநரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார். படத்தின் முதல் பாதி தொடங்கி மீண்டும் மீண்டும் வதைபடுத்தப்படும் காட்சிகளைச் சுழற்சியில் ஓடவிட்டு நம்மையும் வதைத்திருக்கிறார்கள். அதை இரண்டாம் பாதியிலும் ரிப்பீட் மோடில் ஓட்டுகிறார்கள்.

கேரளாவில் 80-களில் நடந்த உண்மை சம்பவம் என்றாலும் அந்த வரலாற்றைச் சரியாகக் காட்சிப்படுத்தாமல் மலையாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்ற இனவெறுப்பைத்தான் படம் முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

கல்லூரியில் நான்கு மலையாள மாணவர்கள் சேர்ந்து ஒரு தமிழ் மாணவரைக் கொல்வதாகக் காட்சி. அதன் வீரியம் விளங்கிய பின்னரும் அதீத வன்முறையை அங்கே கையாண்டது ஏன்? இப்படியொரு கல்லூரி எங்காவது இருக்குமா? என்னதான் அரசியல் பலம் இருந்தாலும், காவல்துறை ஒடுக்குமுறையைக் கையாண்டாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு கொலையை அப்படியே மூடி மறைத்துவிட முடியுமா?

Rebel Review

இது போதாதென்று அந்தக் கொலைக்குப் பழிவாங்க நாயகனும் நண்பர்களும் மலையாள மாணவர்கள் அனைவரையுமே அடித்து வெளுக்கிறார்கள். இதெல்லாம் வீட்டுக்குள்ளே இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல், பக்கத்து வீட்டுக்காரன் வைக்கோல் போரைக் கொளுத்திவிடும் கதையாக இருக்கிறதே பாஸு! ஒன்றும் அறியாத பிற மாணவர்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கும்போது அங்கு உயிரிழப்பு நேர்ந்துவிட்டால், பின்னர் எதிராளிக்கும் நாயகனின் நண்பர்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியராக வரும் கருணாஸ், “இங்க நீலக் கொடி, சிவப்புக் கொடின்னு நிறங்கள்ல பிரச்னை இல்லை. அது யார் கையில இருக்குதுங்கறதுதான் பிரச்னை” என்றொரு வசனத்தை முன்வைக்கிறார். கட்சிகளின் நிறம் எதுவாயினும் அங்கேயும் தவறுகள் நடக்கவே செய்கின்றன என்ற கறாரான அரசியல் விமர்சனத்தை முன்வைக்க இது சரியான வசனம்தான். ஆனால், இந்தத் தெளிவு, படம் நெடுக ஒரு காட்சியில்கூட இல்லை என்பது ஏமாற்றமே! படம் முடிந்த பின்னரும் விடாப்பிடியாக மீண்டும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க அந்த க்ளைமாக்ஸ் அவசியம்தானா? அதன் பின்னர் வரும் அந்த எண்டு கார்டும் குபீர் ரகம்!

நல்ல திரைக்கதை, வசனம் என்று எழுத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், வெறுப்பு பரப்புரையின் மீது ஏறி நிற்கும் இந்த `ரெபல்’, பார்வையாளர்களிடம் “கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் பார்த்து முடித்தால் நீயும் ரெபல்தான்” என்கிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.