கேஜ்ரிவால் கைது விவகாரம்: ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஃபிஷர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் போலவே, கேஜ்ரிவாலும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானவர். இதில் அவர் தடையின்றி கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்தலாம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பவர் நிரபராதி என்ற அனுமானமே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் ஆட்சியின் மையக் கூறு. இது அவருக்குப் பொருந்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள ஜெர்மன் நாட்டின் துணைத் தூதரை இன்று நேரில் அழைத்து, நமது உள்விவகாரங்களில் அவர்களது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற கருத்துகளை எங்களது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையீடாகவும், எங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். இந்தியா ஒரு துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயகம் கொண்ட நாடு. நாட்டில் உள்ள அனைத்து வழக்குகளையும் போலவே, இந்த குறிப்பிட்ட வழக்கிலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த வழக்கில் முன்வைக்கப்படும் ஒருசார்பு அனுமானங்கள் அவசியமற்றவை” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.