"சேப்பாக்கத்தில் இதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம்!" – மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கிய 17வது ஐபிஎல் சீசனின் முதலாவது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டு  ப்ளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.  அதில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது பெங்களூர் அணி. பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

CSK

இந்தப் போட்டியில்  பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்த சமயத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தினேஷ் கார்த்திக்கிடம் “இந்த சீசன் உங்களது கடைசி சீசனாக இருக்குமா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது அதற்குப் பதில் அளித்த தினேஷ் கார்த்திக், “இது ஒரு மிகப்பெரிய கேள்வி. இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்” எனக் கூறினார்.

மேலும், சேப்பக்காத்தில் நீங்கள் ஆடும் கடைசிப் போட்டி இதுதானா எனும் கேள்விக்கு, “ப்ளே ஆஃப் போட்டிகளில் சில சென்னையில் நடத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இது இங்கே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கக் கூடாது என நான் விரும்புகிறேன். ப்ளே ஆப்ஸூக்கு நாங்கள் செல்லும்பட்சத்தில் அதுவே என்னுடைய கடைசி சேப்பாக்கம் போட்டியாக இருக்கலாம். அது சாத்தியப்படவில்லையெனில் இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இடையே கமென்ட்ரியிலும் ஈடுபட்டு வந்தார். அதுகுறித்துப் பேசியவர், “கமென்ட்ரியும் செய்துகொண்டு ஐ.பி.எல்-லுக்கும் தயாராவது கடினமான ஒன்றாக இருந்தது. இந்த முதல் போட்டி எனக்கு பாசிட்டிவான ஒன்றாக அமைந்தது. அணிக்காகச் சில ரன்களை அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.