வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக 3-வது முறையாக களமிறங்கும் காங்கிரஸின் அஜய் ராய்!

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஜய் ராஜ், மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை எதிர்த்து களம் காண்கிறார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மக்களவை தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய நான்காவது பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல உத்தர பிரதேசத்தின் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடியில் தொகுதியான வாரணாசியில் உ.பி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுவது இது மூன்றாவது முறையாகும்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ், 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 1,52,548 வாக்குகள் பெற்று அஜய் ராய் மூன்றாம் இடம் பெற்றார்.

முன்னதாக 2014 மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்த நிலையில், அப்போதும் அஜய் ராஜ் மூன்றாவது இடத்தை தக்கவைத்தார்.

பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஜய் ராய், 1996 முதல் 2007 வரை உ.பி.யின் கோலஸ்லா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு தனக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2009 மக்களவை தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவினார். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை அஜய் ராஜ் இணைத்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.