“7% இந்திய கல்லூரிகளில் மட்டுமே முழு கேம்பஸ் பிளேஸ்மென்ட்.." – ஆய்வு சொல்வதென்ன?

சிலர் கல்லூரி படிப்பை முடிக்கும்போதே வேலையோடு வெளியேறுவதற்கு முக்கிய காரணம், `கேம்பஸ் பிளேஸ்மென்ட்’ (Campus placement). பல நிறுவனங்கள் கல்லூரிகளுக்குச் சென்று இன்டெர்வியூ வைத்து, தகுதியான மற்றும் பணிபுரிய விருப்பமுள்ளவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும். பெரும்பாலும் இந்த வேலைவாய்ப்புகளைக் கல்லூரியே ஏற்பாடு செய்வதுண்டு.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 11,000 மாணவர்கள், யூனிவர்சிட்டி பார்ட்னர்கள் மற்றும் மனித வளப் பயிற்சியாளர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் `Unstop Talent Report 2024′ அறிக்கை வெளியிடப்பட்டது.

கேம்பஸ் இன்டர்வியூ

இந்த அறிக்கையின்படி, “இந்தியக் கல்லூரிகளில் 7 சதவிகிதம் மட்டுமே முழு கேம்பஸ் பிளேஸ்மென்ட் அடைகிறது. 91 சதவிகித மாணவர்கள் தங்கள் கல்லூரி பாடத்திட்டங்கள் வேலைக்கு போதுமான அளவு தயார்நிலையை வழங்குவதாக நம்புகிறார்கள்.

ஆனால், 66 சதவிகித பணியமர்த்துபவர்களும் (Recruiters), 42 சதவிகித யூனிவர்சிட்டி பார்ட்னர்களும் மாணவர்களுக்கு திறன் இடைவெளி மற்றும்  தயார்நிலையில் இல்லாமல் இருப்பது (Lack of Preparation) போன்றவற்றை உணர்கிறார்கள். இவை கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

முன்அனுபவம், பயிற்சிகள், திட்டங்கள் போன்ற காரணிகளை விடத் திறன் அடிப்படையில் பணியமர்த்த 88 சதவிகித ஹெச்ஆர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேசயம் பணிநீக்கங்கள் குறித்த அச்சம், ஐந்தில் மூன்று மாணவர்களை ஊதிய உயர்வை விட, வேலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கத் தூண்டியுள்ளது. 

கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில், ஆண்களுக்கான வருட ஊதியம் 6-10 லட்சமாகவும், பெண்களுக்கு 2-5 லட்சமாகவும் இருக்கிறது. பிசினஸ் ஸ்கூல்களில் 55 சதவிகித ஆண்கள் ஆண்டுக்கு 16 லட்சத்திற்கு மேல் ஆஃபர் பெற்றனர். பெண்களில், 45 சதவிகிதத்தினர் மட்டுமே 16 லட்சத்திற்கு மேல் ஆஃபர் பெற்றுள்ளனர். 

இது குறித்து அன்ஸ்டாப் நிறுவனர் மற்றும் சிஇஓ அங்கித் அகர்வால் கூறுகையில், “மாணவர்கள் மற்றும் மனிதவள நிபுணர்களின் விருப்பங்கள், அக்கறைகளை எடுத்துரைப்பதன் மூலம், திறனுக்கும் (Talent supply) டிமாண்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.