Andre Russell: `சிங்கம் இறங்கிருச்சுடோய்…' – 7 சிக்ஸர்கள்; 256 ஸ்ட்ரைக்ரேட்டில் மிரளவிட்ட ரஸல்!

`Ruthless’ என்கிற ஆங்கில வார்த்தைக்கான அகராதி உதாரணமாக மாறும் வகையில் இரக்கமற்ற முறையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் ரஸல். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் 256 ஸ்ட்ரைக் ரேட்டில் 65 ரன்களை எடுத்து அணியை முழுமையாகச் சரிவிலிருந்து மீட்டிருக்கிறார்.

Andre Russell

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோதாவில் இறங்கிப் புழுதிப் பறக்க கலக்கும்போதுதான் ஐ.பி.எல்-யே சூடுபிடிப்பது போல இருக்கிறது. அதிலும் ரஸல் நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர் ப்ரைம் ஃபார்மில் இருந்ததைப் போல ஒரு இன்னிங்ஸை கொல்கத்தாவிற்கு ஆடிக் கொடுத்திருக்கிறார். கொல்கத்தா அணி நன்றாகவே தொடங்கியது. பில் சால்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். ஆனாலும் சிறுசிறு இடைவெளிகளில் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த மாதிரியான இக்கட்டான சமயத்தில்தான் ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ரஸல் மூவரும் சிறப்பாக ஆடியிருந்தனர்.

அதிலும் குறிப்பாக ரஸல் தனியாக ஒரு பண்டிகைக் கொண்டாட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தார்.

Andre Russell

“இப்படி ஆடுபவரைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினம். முதல் போட்டியிலேயே ரஸல் இப்படி ஆடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது” என வர்ணனையில் டீவில்லியர்ஸ் சக அதிரடி சூறாவளியை இப்படிப் புகழ்ந்துத் தள்ளியிருந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி 85 ரன்களை எடுத்திருந்தது. பெரும்பாலான ரன்களை ரஸல்தான் எடுத்திருந்தார். மயங்க் மார்கண்டேயா நன்றாக வீசியிருந்தார். அவர் ஓவரில் மட்டும் ஒரு 3 சிக்ஸர்கள். புவனேஷ்வர்குமார் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர். அவர் வீசிய இன்னொரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி. அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை புவனேஷ்வர் கொடுத்திருந்தார்.

நடராஜன் கடைசி ஓவரை நன்றாக வீசியிருந்தாலும் அதற்கு முந்தைய ஓவரில் அடிதான் வாங்கியிருந்தார். இத்தனைக்கும் புவனேஷ்வரும் நடராஜனும் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி ஒரு பாசிட்டிவிட்டியோடு வந்திருந்தனர். அவர்களின் நம்பிக்கை முழுவதையும் குலைத்துவிட்டார் ரஸல். 150-ஐ தாண்டுமா என ஊசலாடிக் கொண்டிருந்த கொல்கத்தா 208 ரன்களை எடுத்தது. 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் ரஸல் 65 ரன்களை 256 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார்.

Andre Russell

உள்ளே வந்தால் சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு ஆடும் பழைய ரஸலை மீண்டும் பார்த்ததைப் போன்றே இருந்தது. இதே அடியை இப்படியே தக்கவைத்து சீராக ஆடினாரெனில் இந்த சீசன் சரவெடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.