ஆக்ரோஷம் காட்டிய கேகேஆர் பௌலர்… அதிர்ச்சி கொடுத்த ஐபிஎல் நிர்வாகம் – என்னாச்சு?

IPL 2024 Penalty To KKR Bowler Harshit Rana: இந்தியன் பிரிமீயர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் திருவிழா தொடங்கிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் தற்போது வரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் பேட்டிங் செய்த ஆறு அணிகளும் 170 ரன்களை குறையாமல் அடித்திருக்கின்றன. மேலும், ஒவ்வொரு போட்டியும் ஐபிஎல் தொடருக்கே உண்டான அதே பரபரப்புடன் தொடங்கியிருக்கிறது. 

சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியில் பெரும்பான்மையான பகுதி சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இதனால், ஆர்சிபி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வீழ்த்தியது. நேற்று மாலை நடந்த லீக் போட்டியில் டெல்லி அணி பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்காததும், ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இல்லாததும் டெல்லி அணிக்கு தோல்வியை பெற்றுத் தந்தது. பஞ்சாப் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாய் இருக்கின்றனர். 

ரஸ்ஸல் vs கிளாசென்

அதை தொடர்ந்து நேற்றிரவு நடந்த கேகேஆர் – எஸ்ஆர்ஹெச் (KKR vs SRH) போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில் ஓப்பனர் சால்ட் அதிரடி காட்ட மிடில் வரிசை பேட்டர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல்தர போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்த ரமன்தீப் சிங், நேற்றைய போட்டியிலும் கேகேஆர் அணிக்கு அதிரடி காட்டினார். சால்ட் அவுட்டான பின்னர் ரஸ்ஸல் (Andre Russel) களமிறங்கி 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 64 ரன்களை குவித்தார். 

இதில் கேகேஆர் 208 ரன்களை குவிக்க, எஸ்ஆர்ஹெச் பதிலுக்கு 204 ரன்கள் வரை வந்து கடைசி பந்தில் வெற்றி கோட்டைவிட்டது. கேகேஆர் அணியில் ரஸ்ஸல் என்றால், ஹைதராபாத் அணியில் கிளாசென் (Henrich Klassen). கிளாசென் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்களை அடித்திருந்தார். இருப்பினும், இளம் வீரர் ஹர்ஷித் ராணா (Harshit Rana) வீசிய கடைசியின் ஓவரின் 5ஆவது பந்தில் கிளாசென் ஆட்டமிழந்ததால் அது எஸ்ஆர்ஹெச் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

IPL 2024: இன்றைய போட்டிகள் 

இப்படி ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்க இன்றும் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மாலையில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் – கே.எல் ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (RR vs LSG) அணியுடன் மோதுகிறது. இரவில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் – ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (GT vs MI) உடன் மோதுகிறது. 

ஆரம்பித்த மூன்றாவது நாளிலேயே ஐபிஎல் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ஒரு வீரருக்கு பலத்த அபராதம் ஒன்றும் விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாகியிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு நேற்றைய கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஹர்ஷித் ராணாவுக்குதான் ஐபிஎல் நிர்வாகம் அவரின் போட்டி வருமானத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. 

ஆக்ரோஷம் காட்டிய ஹர்ஷித் ராணா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக தென்பட்டார். குறிப்பாக, பவர்பிளேவின் கடைசி ஓவரில் எஸ்ஆர்ஹெச் ஓப்பனர் மயாங்க் அகர்வாலின் விக்கெட்டை எடுத்த ஹர்ஷித், அவரை நோக்கி ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடினார். இதில் மயாங்க் அக்ரவால், ஹர்ஷித் ராணாவை நோக்கி முறைக்க பதிலுக்கு ராணாவும் அகர்வாலை நோக்கி முறைத்தார். 

இந்த சம்பவத்திற்கு வர்ணனையில் இருந்த இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்தார். மயாங்க் அகர்வால் இதுபோன்ற எதையும் செய்யாத நிலையில், ஹர்திஷ் ராணா இப்படி செய்யக்கூடாது என அறிவுரை கூறினார். இதை தொடர்ந்து, பரபரப்பான கட்டத்தில் கடைசி ஓவரின் 5ஆவது கிளெசன் விக்கெட்டை எடுத்த பின்னரும் ஹர்ஷித் ராணா ஆக்ரோஷமாக கொண்டாட தற்போது அவர் மேல் ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

அதவாது, நேற்றைய கேகேஆர் – எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதால் ஹர்ஷித் ராணாவுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,”மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்ட்ன்ஸ் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா நடத்தை விதிகளை மீறியதால் அவரின் போட்டி வருமானத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஐபிஎல் நடத்தை விதிகள் ஷரத்து 2.5இன் படி ராணா இரண்டு மீறல்களை செய்ததால், முறையே 10% மற்றும் 50% என மொத்தம் 60% அபராதமாக விதிக்கப்படுகிறது. போட்டி நடுவரிடமும் இந்த இரண்டு மீறல்களையும் ஹர்ஷித் ராணா ஒப்புக்கொண்டார். இதுபோன்ற ஒன்றாம் நிலை தவறுகளுக்கு போட்டி நடுவரின் தீர்ப்பே இறுதியானது” என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | பதிரானா வந்தாச்சு… இனி சிஎஸ்கேவில் ‘இந்த’ பிரச்னை இருக்காது – வெளியேறப் போவது யாரு?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.