பாகிஸ்தான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.. இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பரிசீலனை

இஸ்லாமாபாத்:

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்தது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான வர்த்தக உறவை நிறுத்தியது. அதன்பின் வர்த்தக உறவை தொடருவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது இஷாக் தார், சமீபத்தில் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்குவது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலனை செய்யும் என கூறினார்.

“பாகிஸ்தான் தொழிலதிபர்கள் இந்தியாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க விரும்புகிறார்கள். எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்கும்” என்று தார் கூறியதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த கருத்து, இந்தியாவுடனான ராஜதந்திர நிலைப்பாட்டில் பாகிஸ்தான் அரசிடம் சாத்தியமான மாற்றம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது, அண்டை நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை குலைத்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. உறவுகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவிடம் இருப்பதாகவும் வலியுறுத்தியது. மேலும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்நிபந்தனையாக காஷ்மீரில் தனது ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த கருத்தை இந்தியா நிராகரித்ததுடன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்று பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.