40 ஆண்டுகளுக்கும் மேலான கொலை வழக்கு… குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சூயிங்கம்!

அமெரிக்காவில் 1980-ல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு ஒரு சூயிங்கத்தால் குற்றவாளி என நிரூபணமாகியிருக்கிறார். முன்னதாக, அமெரிக்காவின் ஓரிகான் (Oregon) மாகாணத்தில் சரியாக 1980 ஜனவரி 15-ல், மவுண்ட் ஹூட் சமுதாயக் கல்லூரி (Mt. Hood Community College) மாணவியான பார்பரா டக்கர் (Barbara Tucker) என்ற 19 வயது பெண், வளாக வாகன நிறுத்துமிடம் அருகே அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

பார்பரா டக்கர் (Barbara Tucker)

மறுநாள் காலை கல்லூரிக்கு மாணவர்கள் வந்ததையடுத்து பார்பரா டக்கர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் விசாரணையில், பார்பரா டக்கர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும், யார் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. பின்னர், பிரேத பரிசோதனையின்போது அவரின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், ஒரேகான் மாநில காவல்துறை (OSP) குற்றவியல் ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து, அந்த மாதிரிகளிலிருந்து டி.என்.ஏ விவரம் எடுக்கப்பட்டது.

மேலும், இந்த கொலை தொடர்பாக ராபர்ட் ப்ளிம்ப்டன் (Robert Plympton) என்பவர் மீது சந்தேகம் எழ, க்ரேஷாம் காவல் துறையின் (Gresham Police Department) துப்பறியும் அதிகாரிகள் அவரைத் தேடத் தொடங்கினர். அதையடுத்து, ட்ரூட்டேலில் (Troutdale) அந்த நபர் வசிக்கிறார் என்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரை கண்காணிக்கத் தொடங்கியபோது, ஒரு இடத்தில் அவர் சூயிங்கம் துப்பியதைக் கண்டனர்.

ராபர்ட் ப்ளிம்ப்டன் (Robert Plympton)

உடனடியாக, அந்த சூயிங்கத்தைச் சேகரித்து ஒரேகான் மாநில காவல்துறை (OSP) குற்றவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். 2021-ல் மரபியல் வல்லுநர் ஒருவர், 2000-ம் ஆண்டில் பார்பரா டக்கரின் பிறப்புறுப்பு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ விவரங்கள், ராபர்ட் ப்ளிம்ப்டனின் சுவிங்கம் மாதிரியிலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ விவரங்களுடன் ஒத்துப்போவதைக் கண்டறிந்தார்.

குற்றவாளி

இறுதியாக, கடந்த வாரம் நடந்த நீதிமன்ற விசாரணையில், தற்போது 60 வயதாகும் ராபர்ட் ப்ளிம்ப்டன், முதல் நிலை கொலை மற்றும் நான்கு இரண்டாம் நிலை கொலை வழக்குகளில் குற்றவாளி என கண்டறியப்பட்டார். இருப்பினும், தண்டனை குறித்த விவரங்கள் ஜூன் மாதம் நடைபெறும் விசாரணையில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதுவரையில், ராபர்ட் ப்ளிம்ப்டன் காவலில் வைக்கப்படுவார். அதேசமயம், இவரின் வழக்கறிஞர்கள் ஸ்டீபன் ஹவுஸ் (Stephen Houze), ஜேக்கப் ஹவுஸ் (Jacob Houze) ஆகியோர், இந்த வழக்கில் தாங்கள் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அவரது தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.