உதகையில் வேட்புமனு நிகழ்வில் பாஜக – அதிமுகவினர் இடையே ‘சம்பவம்’ – போலீஸ் தடியடியால் பரபரப்பு

உதகை: உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது அதிமுக, பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், கூட்டத்தை கலைக்க காவல் துறை லேசான தடியடி நடத்தினர். இதில், பரபரப்பான இந்தச் சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளர் எல்.முருகனுடன் உதகை வந்தார். உதகை காபி ஹவுஸ் சதுக்கத்திலிருந்து பாஜகவினர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்களை காவல்துறையினர் டிபிஓ சந்திப்பில் நிறுத்தினர். வேட்பாளர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். தொண்டர்கள் டிபிஓ சந்திப்பில் காத்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிமுகவினர் பின்னாடியே வந்ததால், பாஜகவினரை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலையவில்லை. இந்நிலையில், அதிமுகவினர் அப்பகுதிக்கு வரவே இரு கட்சி தொண்டர்களும் எதிர் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இரு தரப்பினரிடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல், இரு கட்சியினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினார். ஆனால், இரு தரப்பினரும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பவே, கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதனால், தொண்டர்கள் சிதறி ஓடினர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், ‘தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை’ எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கடுமையாக கூச்சலிட்டார்.

அப்போது வேட்புமனுத் தாக்கல் செய்து முடித்துவிட்டு வந்த எல்.முருகன் மற்றும் அண்ணாமலை, தடியடி குறித்து கேள்விப்பட்டு தங்கள் தொண்டர்களை சந்திக்க சென்றனர். அப்போது, டிபிஓ சந்திப்பில் காவல் கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்கும் வரை செல்வதில்லை எனக் கூறி தொண்டர்களுடன் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அப்போது, அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அண்ணாமலையிடம், ‘‘இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்கவே, எங்கள் கடமையை செய்தோம். தடியடியால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறினார். இதை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தொண்டர்கள் கலைந்து செல்ல கூறினார். இதன் பின்னர் அப்பகுதிக்கு வந்த அதிமுகவினர், தங்களிடம் எஸ்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி அப்பகுதியில் சாலையில் அமர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த எஸ்பி சுந்தரவடிவேல் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் ஆகியோரிடம் பேசினார். பாஜக தலைவரிடம் கூறியதையே அதிமுகவினரிடமும் கூறினார். இதை ஏற்றுக்கொண்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

இது குறித்து அண்ணாமலை கூறும் போது, ‘‘வேட்புமனு தாக்கலுக்கான எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சண்டையிட்டனர். கூட்டத்தை கலைக்க காவல்துறை தேவையில்லாமல் தடியடி நடத்தியது. இதில், 14 தொண்டர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று சென்றனர். இது தேவையற்ற நிகழ்வு, காவல் துறை பேசி சரி செய்திருக்க வேண்டும்.

காவல் துறையைக் கண்டித்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்பி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கூட்டம் கலைந்தது. சம்பவம் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்படும்’’ என்றார் அண்ணாமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.