“நான் வெற்றி பெற்றால்…" – பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா அடுக்கிய வாக்குறுதிகள்

மாண்டி: பிரமதர் மோடியின் பணிகள் எங்களை வெற்றி பெறவைக்கும் என்று இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி வேட்பாளராக கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, மாண்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினரோடு ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய கங்கனா ரணாவத், பின்னர் பாஜகவினரோடு தேர்தல் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத், “பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இமாச்சலைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, மாநிலத்தின் மூத்த தலைவர்களான அனுராக் தாக்குர், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி.

எனக்கு இந்த மிகப் பெரிய பொறுப்பை பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். பாஜகவின் எளிய தொண்டராக நான் கட்சியில் இணைந்திருக்கிறேன். நான் என்னை சூப்பர் ஸ்டாராகவோ, நடிகராகவோ கருதவில்லை. அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். நான் கட்சியின் எளிய தொண்டர். கட்சி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்.

நான் வெற்றி பெற்றால் மக்களுக்காக இருப்பேன். அவர்களுக்காக சேவை செய்வேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் கலாச்சாரமே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருப்பதுதான். எனது செயல்பாடும் அந்த வகையில் இருக்கும். நாங்கள் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். மாண்டி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வோம். 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் இலக்குக்காக பாடுபடுவோம்.

உலகின் மிகவும் நேசிக்கக் கூடிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது அடிச்சுவட்டை பின்பற்றி நாங்கள் நடப்போம். பிரதமர் மோடியின் திட்டம்தான் எங்கள் திட்டம். ஒரு படை வீரரைப் போல் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம். நாங்கள் வெற்றி பெறப்போவது உறுதி. அதற்கு, எங்களது பெயரோ, உழைப்போ காரணமாக இருக்காது. பிரதமர் மோடியின் பணிகளே எங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.

பாஜகவுக்கு நான் எப்போதுமே நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இருக்கிறேன். நான் பிறந்த தொகுதியிலேயே கட்சி என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கட்சி மேலிடத்தின் இந்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்திருப்பதன் மூலம் பெருமையாக உணர்கிறேன். நல்ல தொண்டராகவும், நம்பகமான பொதுநலப் பணியாளராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கங்கனா தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஹாமிர்பூர், மாண்டி, ஷிம்லா, கங்கரா என 4 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019 தேர்தலில் இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இம்முறை மக்களவைத் தேர்தலோடு, இமாச்சலப் பிரதேசத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.