விளவங்கோடு இடைத்தேர்தல்: தாரகை கத்பர்ட்டைக் களமிறக்கிய காங்கிரஸ்… பின்னணியில் 2 காரணங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் ஆவார். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்தனர். கடைசி முயற்சியாக மாவட்டத் தலைவர் பினுலால் சிங்குக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் ஆதரவு இருந்திருக்கிறது. தாரகை கத்பர்ட் மற்றும் கே.ஜி.ரமேஷ் குமார் ஆகியோர் மாநில நிர்வாகிகள் மூலமாக சீட்டுக்கு மூவ் செய்து வந்தனர். இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க ராணி, பா.ஜ.க நந்தினி, நாம் தமிழர் ஜெமினி

தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் விஜய் வசந்த் குறியாக இருந்தார். அதிலும் அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக மீனவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து `விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் விஜய் வசந்த்துக்கு ஓட்டு போடுவோம். இல்லை என்றால், அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரிப்போம்’ என பகிரங்கமாக அறிவித்திருந்தன. இது மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம்.

விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தாரகை கத்பர்ட்

தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்” என சூசகமாக கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ராணி, பா.ஜ.க சார்பில் நந்தினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி என பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டிருந்தனர். இதுவும் தலைமையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார். விஜயதரணி எம்.எல்.ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.