`அண்ணாமலைக்கு 76 ஏக்கர் நிலம், சொத்தெல்லாம் எங்கிருந்து வந்தது?' – சிங்கை ராமச்சந்திரன் கேள்வி!

கோவையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, நான் மறைந்த எக்ஸ் எம்.எல்.ஏ சிங்கை கோவிந்தாராஜுவின் கோட்டாவில் எம்.எல்.ஏ சீட் வாங்கியதாகவும், அவர் ஒரு தகரடப்பாவை மட்டுமே வைத்துக்கொண்டு வந்ததாகவும் கூறுகிறார். முதலில், இறந்த எனது அப்பாவை பற்றி பேசுவதே தவறான செயல். நான் சிறுவயதிலிருந்து கஷ்டப்பட்டு படித்து முன்னேறினேன். அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இன்று பா.ஜ.க ஆளும் குஜராத்தில் அஹமதாபாத் கல்லூரியில் மெரிட்டில் படித்தவன்.

அண்ணாமலை

மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்துதெடுக்கப்பட்டு செவ்வனே பணி செய்தவன். என் அம்மாவின் உழைப்பால்தான் படித்தேன். நானாகவே அறிஞர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, கழகத்துக்குள் வந்தேன். 18 வருடங்களாக உழைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக அடிப்படையில் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன்.

என் அப்பாவைப் பற்றி அவதூறு பேசியதற்கு நானே கேட்காவிட்டாலும், கழக தொண்டர்கள் விட மாட்டார்கள். அண்ணாமலை மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். முழுவதுமாக ஜெயிப்பேன் என்கிறார். ஒரே போனில் மோடியை அழைத்துப் பேசி பிரச்னைகளைத் தீர்ப்பேன் என்கிறார். அப்படியென்றால், இப்போதே செய்திருக்கலாமே… ரோட்டு ஷோ நடைபெற்றபோது, கோவையின் பெருமைகள் அத்தனையையும் விட்டுவிட்டு, 30 வருடங்கள் முன்பு நடந்த பாம் விபத்தை ஏன் முன்னிறுத்துகிறார்கள். காரணம் என்ன… மக்கள் எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.

அவர்களுக்குத் தெரியும். கரூருக்குச் சென்றால் நான் கரூர்காரன். கரூர்தான் தாய் என்கிறார். ஊரெல்லாம் சுற்றும்போது, அதற்கு தேவைக்கேற்ப பேசுகிறார். கோவை வந்தால் நான் கோவைக்காரன் என்கிறார். எதற்காக இந்த மாற்றி மாற்றிப் பேசும் பேச்சு… தகரடப்பாவை வைத்துக்கொண்டுதான் வந்தார் என்றால், அவருக்கு எப்படி 76 ஏக்கர் நிலம், வீடு சொத்து எல்லாம் சேர்ந்தது. ஒரு பண்ணையாரைப் போலத்தானே வாழ்கிறார். நான் கஷ்டப்பட்டு படித்து உழைத்து கோவை மண்ணிலிருந்து கோவைக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

செய்தியாளர் சந்திப்பு

அவரைப்போல் தீடீரென பாராசூட்டில் இருந்து குதிக்கவில்லை. ஊழல் குறித்தெல்லாம் பேசுவதற்கு பா.ஜ.க-விற்கு தகுதியே இல்லை. எலக்ட்டோரல் பாண்ட் விஷயத்தில் 6,000 கோடி ரூபாய் ஊழல் பற்றி மக்களுக்குத் தெரியும். இங்கு போட்டியே தி.மு.க வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான். அண்ணாமலை என்னதான் இஷ்டம்போல கற்பனைகளை அள்ளி வீசினாலும், வெற்றி எங்கள் பக்கம். தி.மு.க-வும் மக்களிடம் குறைந்தபட்ச நல்ல பெயரைக்கூட எடுக்கவில்லை. தூய்மையில் 42-வது இடத்தில் இருந்த கோவை தற்போது 83-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கோவை தொகுதியின் முக்கிய பிரச்னைகளை இங்கே க்ளிக் செய்து பதியுங்கள்; இவை அனைத்தும் வெற்றிபெறும் எம்.பி-க்களிடம் சேர்க்கப்படும்!

சொத்துக்குவிப்பு வழக்குகள் பயங்கரமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் கஞ்சா என எல்லாமும் கட்டுப்பாடின்றி இருப்பதை மக்கள் அறிவர். இதில் `இந்தி தெரியாது போடா’ டீஷர்ட் போட்டுகொண்டு, மோடியிடம் அனுமதி வாங்கி ‘கேலோ இந்தியா’ வேறு நடத்துகிறார்கள். எனவே ஜனநாயகத்தை நம்புகிற எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அண்ணாமலையின் கற்பனை கனவுகள் கலையப் போவது உறுதி” என பேசி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.