`ஆர்டிக்கிள் 21 மீறல்கள்..!’ – கவனம் பெற்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கருத்து – விரிவான விளக்கம்!

“பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற பல வழக்குகள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன” என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 

வழக்கறிஞர் அகிலேஷ் துபேயின் ‘Treatise on PMLA – Law and Practice’ புத்தக வெளியீட்டு விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி உஜ்ஜல் புயான் பேசுகையில், “PMLA என்பது சமீப காலங்களில் மிகவும் விவாதிக்கப்படும் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் விஷயமாகும்,  PMLA என்பது ஒரு நேரடி பிரச்னை. இது ஒரு சூடான பிரச்னை.

நீதிபதி உஜ்ஜல் புயான்

ஊழல் கறைபடிந்த பணத்திற்கு எதிரான போராட்டத்தில் PMLA முக்கிய ஆயுதம். பணமோசடி என்ற அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது மிகவும் அவசியம் என்றாலும், PMLA எனும் ஆயுதம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, சட்டம் அதன்  வீரியத்தை இழந்துவிடும். அப்படி நடந்தால், அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் நடவடிக்கைகள் மற்றும் பிஎம்எல்ஏ நீட்டிப்பு மூலம் எதிர்மறையான கருத்துக்கள் எழலாம். அப்படி நேர்ந்தால் தேசமும் பாதிக்கப்படும்…” என்றார்.

மேலும், “உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், பி.எம்.எல்.ஏ., தொடர்பாக எழும் விஷயங்கள், என் அமர்வு முன் தொடர்ந்து பட்டியலிடப்படுகின்றன. சட்ட நடைமுறை கடினமானதாக இருந்தால், நீதித்துறை ஆய்வு செய்ய வேண்டியது அதிகமாக இருக்கும் என்பது சட்டத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. அதில் எந்தத் தவறும் இல்லை.

குற்றவாளிகளை தண்டிக்கும் செயல்பாட்டில், நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை எப்போதும் உறுதி செய்வதே நீதித்துறையின் குறிக்கோள். PMLA சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வழக்கறிஞரைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.  சட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் மேலான அரசியலமைப்பு ஆணையை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான, உண்மையான உணர்வு…” என்றார். 

மனு சண்முகசுந்தரம்,

இது தொடர்பாக வழக்கறிஞர் மனு சண்முகசுந்தரத்திடம் பேசினோம், “PMLA சட்டத்தில் முதலில் PROCEEDS OF CRIME ( குற்றம் நடந்திருக்கிறதா? ) இருக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். அப்படி குற்றத்தின் அடிப்படையில் பெற்ற சொத்தையோ, பணத்தையோ, பண பரிமாற்றம் செய்கிறார்களா? என பார்க்க வேண்டும். நிறைய இடங்களில் அதாவது குற்றமே நடைபெறாத, அல்லது குற்றம் நடந்தது உறுதி செய்யப்படாத இடங்களுக்கு அமலாக்கத்துறை சென்று, வழக்கு பதிகிறது.

இதற்கு நல்ல உதாரணம், தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள மணல் கொள்ளை வழக்கு. விசாரணையில் முதலில் எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால் சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். அமலாக்கத்துறையால் அது முடியாது. அதை யார் செய்ய முடியும்?. மாநில அரசின் கீழ் உள்ள அதிகாரிகள் தான் அதை உறுதி செய்ய முடியும். இந்த வழக்கில் ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்புகிறார்கள். குற்றம் நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்காமலே எப்படி சம்மன் அனுப்ப முடியும்?. நிரூபிப்பதை கூட விடுங்கள் அது குறித்து விசாரணை கூட நடைபெறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அமலாக்கத்துறை திடீரென எப்படி இந்த வழக்கில் குதிக்க முடியும் என்பது தெரியவில்லை. இது ஒரு முக்கியமான வரம்பு மீறல். 

மணல் குவாரி

இது ஒரு புறம் இருக்கட்டும். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவரைக் கைது செய்து 13 மாதங்களாகியும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இப்போது 4 நாட்களுக்கு முன் கெஜ்ரிவாலைக் கைது செய்திருக்கிறார்கள். அப்படி என்றால் 13 மாதங்கள் கழித்துதான் இதில் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உண்டு என்ற தெளிவு அமலாக்கத்துறைக்கு கிடைக்கிறதா?. இது நம்பும்படி இருக்கிறதா?. இது அப்பட்டமான வரம்பு மீறல் இல்லையா? முதலில் தப்பித்து ஓடுபவர்களைத் தான் இப்படி அதிரடியாகக் கைது செய்வார்கள். ஒரு மாநில முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ, அல்லது அமைச்சரோ அப்படி தப்பித்து ஓடுபவர்களா என்ன? 

BAIL IS A RULE, JAIL IS EXCEMPTION என்பது CRPC எனும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலிருந்து வருகிறது. அதன்படி 30 முதல் 90 நாட்களுக்குள் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டாலோ, அல்லது விசாரணை தொடங்காவிட்டாலோ குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளிக்கலாம் என சட்டத்தில் உள்ளது. இது அனைத்து விதமான குற்றங்களுக்கும் இது பொருந்தும். மேலும் ஜாமீன் என்ற உரிமையை ARTICLE 21 வழங்குகிறது. 

ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் யாரும் பறிக்க முடியாது (YOU CAN  NOT TAKE AWAY A PERSON’S LIFE AND LIBERTY) என்பதுதான் ARTICLE 21 இன் அடிப்படை. அதனால் தான் செந்தில் பாலாஜி வழக்கில் கூட ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை நினைத்தால் யாரையும் கைது செய்து விட முடியாது. PMLA சட்டம் CRPC சட்டத்தை மீறி செயல்பட முடியாது.  இதை உறுதி செய்யும் பல உச்ச நிதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. 

செந்தில் பாலாஜி

நாளைக்கே அரசு CRPC சட்டம் இங்கு செல்லுபடி ஆகாது. நாங்கள் 1000 நாட்கள் கூட விசாரிப்போம் என்று கொண்டு வந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அபத்தம் தான் PMLA சட்டத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகிறது. ARTICLE 21-ஐ பல வகைகளில் அமலாக்கத்துறை மீறுகிறது. உதாரணத்திற்கு காலை 8 மணிக்கு ஒருவர் வீட்டில் சோதனைக்கு செல்கிறார்கள் என்றால், சட்டப்படி மாலை 5 மணி, 6 மணிக்கெல்லாம் சோதனையை முடிக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்வதில்லை. நான்கைந்து நாட்கள் இரவு பகலாக சோதனை மேற்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட சட்டத்தை மீறி ஒருவரை வீட்டுச் சிறையில் வைக்கிறார்கள். இது அந்த நபருக்கு மட்டுமின்றி அவரின் குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற விஷயங்களைத் தான் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சுட்டிக் காட்டுகிறார். 

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை கைது செய்யும் நேரத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். ஹேம்ந்த் சோரம் இரவு 10 மணி, கெஜ்ரிவால் 11 மணி, செந்தில் பாலாஜி 12 மணி. நடு ராத்திரியில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வீண் பதற்றத்தை மட்டுமே இது உருவாக்குகிறது. PMLA சட்டம் குறித்து 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை அளித்தது. அதன் பெயர் விஜய் மதன் லால் சவுத்ரி வழக்கு.

அந்த வழக்கை, பதவிக்காலம் முடியும் நிலையில் இருந்ததால் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்- ஆல் மறு ஆய்வு செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஆய்வு செய்து அமலாக்கத்துறையின் வரம்பு குறித்து விதிகளை உருவாக்கினால், மட்டுமே PMLA சட்டத்தை கட்டுப்படுத்த முடியும்” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.