`ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்'- சேஷூ குறித்து கார்த்திக் யோகி

சந்தானம் படங்களின் ஆஸ்தான காமெடி நடிகரனா ‘லொள்ளு சபா’ சேஷூ, உடல் நல பாதிப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷூ, 10 நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மரணமடைந்திருக்கிறார்.

‘லொள்ளு சபா’ சேஷூ

சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் கோவில் பூசாரியாக பரதநாட்டியம் ஆடிக் கலக்கியிருப்பார். அவரது காமெடி பரதநாட்டியம் வைரலானது. மறைந்த சேஷூவின் நினைவுகள் குறித்து கனத்த இதயத்துடன் இங்கே பகிர்கிறார் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி.

”ரொம்ப நல்ல மனிதர். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் பரதநாட்டியம் சீன் ஷூட் பண்ணும் போது அவருக்கு 45 வயதுதான் இருக்கும்னு நினைச்சேன். ‘ஆடுறீங்களா’ன்னு கேட்டேன். ‘அதுக்கென்ன, ஆடிட்டாப் போச்சு’ன்னு சொல்லி அசத்தலா ஆடினார். அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆன போதுதான் அவருக்கு 60 வயது என்கிற விஷயமே தெரியும்.

கார்த்திக் யோகி

சேஷூ அண்ணாவுக்கு காமெடி சென்ஸ் அவ்ளோ அதிகம். அவர் பேசுற டயலாக் எல்லாம் அவ்ளோ காமெடியா இருக்கும். மத்த காமெடி நடிகர்கள்னா, ஒருவரி பன்ச் மாதிரி பேசிட்டுப் போயிடுவாங்க. ஆனா, சேஷூ அண்ணா அதையெல்லாம் பாடிலாங்குவேஜ் காமெடியா பண்ணி அசத்துவார். ஞாபக சக்தி அவருக்கு நிறைய உண்டு. எதையும் மறக்காமல், விட்டுப்போகாமல் சொல்லி அசத்துவார். அவரது பலம் என்னன்னு சந்தானம் சாருக்கு நல்லா தெரியும். அவங்க ரெண்டு பேருமே ஆரம்பக்காலம் முதல் நண்பர்கள்ங்கிறதனால, சந்தானம் சார், ‘மாம்ஸ்’னு தான் அவரைக் கூப்பிடுவார். அதைப் போல சேஷூவும் அவரை ‘என்ன சந்தானம்’னு உரிமையா அன்பா பேசிப்பாங்க. ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் குடிகாரன் கேரக்டரை முதல்ல மாறனுக்குத்தான் எழுதியிருந்தேன். சந்தானம் சார்தான் ‘குடிகாரன் கேரக்டர்’ சேஷூ பண்ணட்டும்னார். அவருக்கு இவரோட ப்ளஸ் தெரியும்.

ஸ்பாட்டுல சின்னச் சின்ன ஆர்ட்டிஸ்ட்கள் நிறைய பேரை நடிக்க வைக்கச் சொல்லிக் கேட்பார். ‘கார்த்தி, அவங்களுக்கும் ஒரு ரெண்டு நாள் வொர்க் குடு. எதாவது நடிக்க வச்சிடு… அவங்க வீட்டுலேயும் அடுப்பு எரியட்டும். வயிறார சாப்பிடட்டும்’னு இவர் வாய்ப்புக் கேட்டு அவங்களை நடிக்க வச்சு, அழகு பார்ப்பார். அப்படி ஒரு தங்க மனசுக்காரர் அவர்.

என் முதல் படம் ‘டிக்கிலோனா’வில் அவருக்கு ‘பில்டப் மென்டல்’ ஆக ஒரு சின்ன கேரக்டர்தான் கொடுத்திருப்பேன். பெரிய கேரக்டரைக் கொடு கார்த்தின்னு சொல்லுவார். ஒரு நாள் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எங்க அம்மா வந்திருந்தாங்க. அவங்ககிட்ட இவர், ‘உங்க பையனை எனக்கு பெரிய கேரக்டர் கொடுக்கச் சொல்லுங்கம்மா’ன்னு சொன்னார். அதை மனசுல வச்சுத்தான் அவர்கிட்ட ‘என் அடுத்த படத்துல 60 நாளும் நீங்க நடிக்கிறீங்கன்னு சொல்லி, நடிக்க வச்சேன்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’யில்..

‘எல்லாப் படத்திலேயும் ‘ஐயரா, பூசாரியாவே நடிக்கறேன். போலீஸ் கேரக்டர் மாதிரி வித்தியாசமான ரோலா கொடு கார்த்தி’ன்னார். அதைப் போல ஆடியோ ஃபங்ஷன்ல ‘உன் அடுத்த படத்திலேயும் வாய்ப்பு குடு’ன்னு கேட்டார். அதை மனசுல வச்சு, என் அடுத்த படத்துல அவருக்கு ஒரு ரோல் வச்சிருந்தேன். அந்த ரோல்ல இனி யார் நடிக்க முடியும்னு தெரியல!

ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி அவர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போயிடுச்சு. செம வைரலாகிடுச்சு’ன்னு சந்தோஷமா சொன்னார். உடனே நான், ‘அதை ரிப்போர்ட் பண்ணி டெலிட் பண்ணச் சொல்லிடுறேன்’னு சொன்னேன். உடனே சேஷூண்ணா, ‘அதெல்லாம் பண்ணிடாதே… நமக்கு ரீச் ஆனால் சரிதான்’னார். அந்த மெசேஜ் என் மொபைல்ல இன்னும் அப்படியே இருக்கு. தமிழ் சினிமா ஒரு இயல்பான காமெடி நடிகரை இழந்திருக்கு” – நெகிழ்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.