பிரசாரங்களில் பாஜக-வை பக்குவமாக அணுகும் எடப்பாடி! – களத்தில் கைகொடுக்குமா?!

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதியில் 33 இடங்களில் களமிறங்குகிறது அ.தி.மு.க. மீதமுள்ள 7 சீட்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுக்க வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி

முன்னதாக, திருச்சியில் மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில், திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசி இருந்தார் எடப்பாடி. வழக்கமாக மேடையில் பேசும்போது, பழைய கதைகளையும், தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மணிக்கணக்கில் பேசி தொண்டர்களை சோர்வடைய செய்வார் எடப்பாடி என்ற விமர்சனத்தை அதிமுக-வினரே முன்வைப்பார்கள். ஆனால், திருச்சி பொதுக்கூட்டத்தில் ஆளும் தி.மு.க அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து ஸ்கோர் செய்திருந்தார் எடப்பாடி.

இருப்பினும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறந்ததுபோல, மத்திய பா.ஜ.க அரசை ஒரு இடத்தில்கூட விமர்சனம் செய்யாமல் தவிர்த்து இருக்கிறார் எடப்பாடி என்று விமர்சனம் எழுந்து இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும் இதனை சொல்லி அதிமுக பாஜக கள்ள கூட்டணி என்றிருக்கார்.

முன்னதாக, சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது, ‘ பா.ஜ.க குறித்து நீங்கள் விமர்சனம் செய்வதே இல்லையே’ என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, ‘ போகபோக பாருங்கள்’ என்று பதிலளித்தார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், மாநாடுபோல நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே பா.ஜ.க குறித்து எடப்பாடி விமர்சனமே செய்யவில்லை. அதேபோல, தூத்துக்குடி பொதுக்கூட்டத்திலும், பா.ஜ.க குறித்து விமர்சனம் செய்யாத எடப்பாடி, ‘பாரத பிரதமர் மோடியை கண்டால், திமுகவுக்கு பயம்’ என்று மோடியை மறைமுகமாக புகழ்ந்து தள்ளியிருந்தார். கூட்டணி முறிந்தாலும், பா.ஜ.க குறித்து எடப்பாடி விமர்சனம் செய்யாதது ஏன் என்ற கோணத்தில் விசாரித்தோம்.

இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

” பா.ஜ.க-வுடான கூட்டணியை முறித்தது என்பது மிக நல்ல முடிவு. ஆனால், அந்த முடிவை எடுக்க வைக்கவே சீனியர்களுக்கு ஒருவருடத்துக்கு மேலே ஆகிவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலை பா.ம.க, பா.ஜ.க, த.மா.க, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என பெரும் படையோடு சந்தித்தோம். ஆளும் வாய்ப்பு கைநழுவிபோனாலும், பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தோம். இரட்டை தலைமை இருப்பதால்தான், சரியான முடிவை விரைவாக எடுக்கமுடியவில்லை என்ற எண்ணம் நிர்வாகிகளுக்கு இருந்தது. அதை சரிசெய்யதான் ஒற்றை தலைமைக்கும் எடப்பாடி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

ஆனால், எடப்பாடியாலும் சரியான முடிவை விரைவாக அறிவிக்க முடியவில்லை. இதற்கிடையே, ‘பா.ஜ.க நம்மீது சவாரி செய்கிறது. நம்மை அழித்து அந்த இடத்தை பிடிக்க துடியாய் துடிகிறது’ என்று நிர்வாகிகள் மத்தியில் கிளர்ச்சி தீ பரவியது. ஆனாலும், டெல்லி தலைமை தன்னிடம் இணக்கமாக இருப்பதை எடப்பாடி நிர்வாகிகளிடம் புரியவைக்கதான் முயற்சி செய்தார்.

ஒருகட்டத்தில் அது எடுப்படவில்லை. போதாக்குறைக்கு பா.ஜ.க மாநில தலைமை ஓவராக செல்லவே, வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வுடனான் கூட்டணி முறிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார் எடப்பாடி. ஆனால், அன்றுமுதல் இன்றுவரை பா.ஜ.க-வை விமர்சிக்க எடப்பாடி தயக்கம் காட்டுகிறார். பா.ஜ.க கூட்டணியில் இருந்து சி.ஏ.ஏ, விவசாய மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் அ.தி.மு.க ஆதரவோடுதான் நிறைவேற்றப்பட்டன. அப்போது எங்களுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து பயங்கர அழுத்தமிருந்தது. இதுதான் அ.தி.மு.க மீது வரலாறு காணாத களங்கம் ஏற்பட முக்கிய காரணம்.

எடப்பாடி பழனிசாமி

இதை கூட்டணி முறிவுக்கு பிறகு சரிசெய்திருக்கவேண்டும். ஆனால், பா.ஜ.க குறித்தோ, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என யார் மீதும் எடப்பாடி விமர்சனம் வைக்கவே இல்லை. ஆரம்பித்தில், மத்திய அரசு நமக்கு எதுவுமே செய்தது இல்லை என்று காங்கிரஸ் குறித்தும் பாஜக குறித்தும் கொஞ்சமாவது பேசிய இ.பி.எஸ்., தற்போது சுத்தமாக பா.ஜ.க குறித்து பேசுவதே இல்லை.

நடப்பது நாடாளுமன்ற தேர்தல். பாஜக அரசு இதையெல்லாம் செய்யவில்லை. திமுக எம்.பி.க்கள் அதை கேட்கவில்லை என்று ஆதாரபூர்வமாக பிரசாரம் செய்தால்தான், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். பா.ஜ.க குறித்து தேர்தல் பிரசாரத்தின்போதே பேசாதவர்கள், நாளை வெற்றிப் பெற்றால், எப்படி பேசுவார்கள் என்று தொண்டர்கள் மத்தியிலேயே சந்தேகம் வந்துவிட்டது. பா.ஜ.க-வையோ அதன் தலைவர்களை எதிர்த்து துணிச்சலாக பேசிருந்தால், ‘ கூட்டணி முறிவு நாடகம்’ என்ற தி.மு.க-வின் கூற்று, உருதெரியாமல் கரைந்துபோயிருக்கும். ஆனால், பா.ஜ.க குறித்து பேசாமல் சமாளித்துக் கொண்டே இருந்ததால்தான், தி.மு.க ‘மறைமுக கூட்டணி… கள்ள கூட்டணி…’ என்று விமர்சனம் செய்கிறார்கள். இப்போது, பாஜகவுடன் தேர்தலுக்கு பின் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று திமுக பிரசாரம் செய்ய தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

ஆளும் கட்சியின்மீதான மக்களின் அதிருப்தியை தேர்தலில் அறுவடை செய்யவேண்டுமென்றால், ஆளும் தரப்பை துணிச்சலாக எதிர்க்கவேண்டும் என்பதுதான் பார்மூலா.

அதை தமிழ்நாட்டில் செய்ய எடப்பாடிக்கு தயக்கமில்லை. ஆனால், மத்திய பா.ஜ.க-விடம் அப்படி செய்ய பெரும் தயக்கம் இருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு என்ற புள்ளியில்தான் மொத்தமாக கோட்டைவிட்டுவிடுகிறார் எடப்பாடி. ” என்றனர் ஆதங்கத்துடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.