‘இளம் மம்தா’, உள்ளூர் போராளி… – யார் இந்த சயோனி கோஷ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா, மைசூர் தொகுதியில் பாஜக சார்பில் மைசூர் மன்னர் குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் உள்ளிட்ட பல புது முகங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில், பெங்காலி நடிகையும், அரசியல்வாதியுமான சயோனி கோஷ் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். துடிப்புடன் இளம் மம்தாவாக வலம் வரும் திரிணமூலின் உள்ளூர் போராளியான (streetfighter) சயோனி கோஷ் இந்தத் தொகுதியில் வெற்றி வேட்பாளராக மாறுவாரா? – இதோ ஒரு பார்வை.

மம்தாவின் கணக்கு என்ன? – மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணமூல் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என மம்தா பானர்ஜி கட்சி அறிவித்தது. ‘இந்தியாவின் நலனைவிட மேற்கு வங்கத்தின் நலனே எனக்கு முக்கியம்’ என யூடர்ன் போட்டுவிட்டார் மம்தா. இதனால் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில்தான் மேற்கு வங்கத்தில் தனது பலத்தை நிருபிக்க ஆல் ரவுண்டரான யூசுப் பதான், பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளர் ரச்சனா பானர்ஜி ஆகியோரை மம்தா களம் இறக்கியுள்ளார்.

முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை மிமி சக்ரவர்த்தி கடந்த மக்களவைத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறை எம்.பி ஆனார். அதன் பிறகு, கடந்த பிப்ரவரியில், “இத்தனை ஆண்டுகளில் எனக்கு கிடைத்த புரிதல் என்னவென்றால், அரசியல் எனக்கானது அல்ல. எனக்கு அதில் விருப்பம் இல்லை” எனக் கூறி தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியிடம் அளித்தார். இந்நிலையில், அதே ஜாதவ்பூர் தொகுதியில் களம் கண்டுள்ள சயோனி கோஷ் பற்றி காண்போம்.

யார் இந்த சயோனி கோஷ்? – சயோனி கோஷ் ‘இச்சே டானா’ (Ichhe Dana) என்ற டெலிபிலிம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு 2010-இல், அவர் நோட்டோபோர் நாட்அவுட் (Notobor Notout) மூலம் வெள்ளித் திரையில் தோன்றினார். அதோடு அலிக் சுக், கோல்போ ஹோல்வோ ஷோட்டி, ஏக்லா சோலோ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். முதல்வர் மம்தாவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அபிஷேக் பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர்தான் சயோனி கோஷ். நன்கு பாடக்கூடியவராகவும் அறியப்படுகிறார்.

இவர் 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே கட்சியில் சேர்ந்து பம்பரமாக சுழன்று பணியாற்றினார். இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவர் எதிர்க் கட்சியின் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அதைக் கண்டு மனம் தளராத சயோனி கோஷ், தனது கட்சி சகாக்களுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளார். சயோனி கோஷின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக, 2021-ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக (TMC’s youth wing) நியமிக்கப்பட்டார்.

கோஷ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இரண்டரை வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் தற்போதுவரை தனது பணியை திறம்பட பணியாற்றி வருகிறார் என சொல்லப்படுகிறது. 31 வயதான கோஷ் சமீபத்தில்தான் தனது தாயை இழந்தார், ஆனால் அடுத்த நாளே தனது அரசியல் வேலையை தொடர்ந்தார். இவ்வாறு தனது அதீத மக்கள் சேவையால், தலைமையை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஆனால் அவரின் மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. அண்மையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் நடிகை சயோனி கோஷுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாதவ்பூரில் அவர் பாஜகவின் வேட்பாளர் அனிர்பன் கங்குலியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஜாதவ்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரச்சாரத்தில் இறங்கிய சயோனி கோஷ், தனது ஆதரவாளர்களுடன், ஜாதவ்பூர் தெருக்களில் நடந்து, வாக்காளர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது சயோனி கோஷை உள்ளூர் போராளி என்று ஒப்புக்கொண்ட மம்தா அவருக்காக பிரச்சாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. வெள்ளை காட்டன் புடவை, வெள்ளை செருப்பு அதோடு நடு உச்சியில் கொண்டை என இளம் மம்தா பானர்ஜியாக கோஷ் வலம் வருகிறார். மக்களுக்காக தெருக்களில் இறங்கி போராடும் உள்ளூர் போராளியான (streetfighter) கோஷ் ஜாதவ்பூர் தொகுதியில் வெற்றி வெறுவாரா என்பதை களம் தான் தீர்மானிக்கும்.

முந்தைய பகுதி: லாலுவின் அடுத்த வாரிசு… யார் இந்த ரோகிணி ஆச்சார்யா? | 2024 தேர்தல் கள புதுமுகம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.