`9 மாதங்களாக செந்தில் பாலாஜியை சிறையில் வைத்திருப்பதால், மனவலிமையை குறைக்க முடியாது!' – ஜோதிமணி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் எம்.பி எம்.எம்.அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கரூர் வேட்பாளர் ஜோதிமணி, “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக, பெரிய யுத்தத்தை நடத்திக்கொண்டு இருந்தோம். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவைக் கொண்டு வந்தபோது, அது மக்களுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடனும், பிரதமர் மோடியுடனும் நட்பு பாராட்டி அமைதியாக சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தொகையாக ஒன்றிய அரசு நயாபைசா வழங்க முடியாது எனத் தெரிவித்தது. அப்போது, ஏன் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எதிராகப் போராடவில்லை.

செயல்வீரர்கள் கூட்டம்

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் போட்டி போடுகின்றன. பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க கட்சிக்கும் வாக்களிப்பது ஒன்றுதான். பத்தாண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க அரசு இடைநீக்கம் செய்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க உறுப்பினர், பா.ஜ.க அரசுக்கு ஆதரவளித்து அமைதி காத்தார். தினந்தோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அந்த அளவுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக தமிழக மக்களுக்காக, தேவைப்பட்டால் ஆங்கிலத்திலும்கூட குரல் எழுப்பினேன். அதேபோல், 5 ஆண்டுக்காலம் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணி குறித்து குறை சொல்ல ஏதும் இல்லை என்பதால், ‘தொகுதி பக்கம் வராத காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி’ என பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். தினந்தோறும் நான் நாடாளுமன்றத்தில் ஆற்றியப் பணிகள் அனைத்தும் ஊடகங்களில் வந்தது. அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிக அளவு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன வகுப்பறைகள், வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியினை பயன்படுத்தி செலவு செய்துள்ளேன். நரேந்திர மோடியைப்போல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தில் ஆடை அணிந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

தங்க நகை, ஆபரணங்களை வாங்கி அணிந்து கொள்ளவில்லை. பா.ஜ.க-வைப் பார்த்து பயந்து அமைதியாக இருந்த அ.தி.மு.க போன்று, நான் அமர்ந்திருக்கவில்லை. மக்களுக்கு உண்மை தெரியும். என்மீதான பொய்ப் பிரசாரங்களை தேர்தல் பிரசாரத்தில் முறியடிப்பேன். பா.ஜ.க ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை வைத்து, செந்தில் பாலாஜியை 9 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்ததால், அவரது மன வலிமையை ஒடுக்க முடியாது. அதேபோல, இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் மனவலிமையும் குறையாது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதுதான் இந்த தேர்தலில், பா.ஜ.க அரசுக்கு அளிக்கும் பதிலடியாகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.