RR vs DC: இந்த 3 வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் இடம் இருக்குமா? – இன்றைய போட்டியில் தெரியும்!

IPL 2024 RR vs DC Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றில் இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 

அந்த வகையில், 17ஆவது ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷப் பண்ட் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை (RR vs DC) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இதே மைதானத்தில் ராஜஸ்தான் அணி லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

RR vs DC: நேருக்கு நேர்

டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணி பஞ்சாப் அணிக்கு எதிரான 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், தனது முதல் வெற்றியை பெற டெல்லி அணி இன்று போராடும். இதுவரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும், டெல்லி 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. சவாய் மான்சிங் மைதானம் பெரும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். 

முதல் இன்னிங்ஸில் 170-180 ரன்கள் அங்கு குவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுண்ஸ் கிடைக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பயனளிக்கும். ஆடுகளத்தில் பந்து திரும்பினால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம் எனப்படுகிறது. அந்த வகையில் பார்க்கப்போனால், இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே அதிக சாதகம் உள்ளது.

பார்த்தாலே பயம் காட்டும் ராஜஸ்தான்…

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் பேட்டிங் வரிசையை பார்த்தோமானால், ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜூரேல் தேவைப்படும்பட்சத்தில் இம்பாக்ட் பிளேயராக ரோவ்மான் பாவெல் ஆகியோர் உள்ளனர். கடந்த போட்டியில் டாப் ஆர்டர் மிரட்டிய நிலையில், இப்போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டர்களும் கைக்கொடுத்தால் ஸ்கோர் 200-ஐ தாண்டும். சுழற்பந்துவீச்சில் அஸ்வின், சஹால், ரியான் பராக் வேகப்பந்துவீச்சில் போல்ட், சந்தீப் சர்மா, ஆவேஷ் கான். தேவைப்பட்டால் இம்பாக்ட் பிளேயராக நான்ரே பர்கர் உள்ளார். எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தான் பலமானதாகவே காணப்படுகிறது. 

பாயுமா டெல்லி கேப்பிடல்ஸ்

மறுபுறம் டெல்லி அணியின் பேட்டிங் தரமானதாக இருந்தாலும், பந்துவீச்சு சுமாராகவே உள்ளது. கலீல் அகமது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இஷாந்த் சர்மாவுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் இன்றைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவர் ஒருவர்தான் மூத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர். நோர்க்கியா இல்லாததால் மிட்செல் மார்ஷைதான் வேகப்பந்துவீச்சில் டெல்லி நம்பியிருக்கிறது.

அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் கடந்த போட்டியில் கலக்கினர். ரிக்கி புய், சுமித் குமார் ஆகிய இளம் வீரர்கள் இன்று சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேட்டிங்கில் வார்னர், மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ரிக்கி புய், ஸ்டப்ஸ், அக்சர் படேல், இம்பாக்ட் பிளேயர் இஷான் போரேல் ஆகியோர் பேட்டிங்கில் கைக்கொடுத்தால் முதல் வெற்றியை டெல்லி இன்று ருசிக்கலாம்.

இந்த மூன்று வீரர்களுக்கு…

இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அதில் உலகக் கோப்பையில் ஈஸியாக டிக்கெட் கிடைக்கும் என்றாலும், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சஹால் (Yuzhvendra Chahal) ஆகியோருக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகும். 

சஞ்சு சாம்சன் தொடர்ந்து பேட்டிங்கில் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு தனது பழைய பார்மை மீட்டெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். சஹால் தனக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பை தட்டித்திறக்கும் முனைப்போடு இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.