ஆரத்தி எடுத்தவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்த வீடியோ பழையது – கோவை ஆட்சியர் விளக்கம்

கோவை: எதிர்வரும் மக்களவை தேர்தலில் கோவையில் போட்டியிடுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் ஆரத்தி எடுத்தவருக்கு அவர் பணம் கொடுத்த வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய கோவை ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அது பழையது என அவரே விளக்கமும் கொடுத்துள்ளார்.

அண்மையில் ஆரத்தி எடுத்தவருக்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ கவனம் பெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் அது தேர்தல் நடத்தை விதிமீறலின் கீழ் வருமா என்பதை உறுதி செய்ய வீடியோ குறித்து ஆராய காவல் துறைக்கு தேர்தல் அதிகாரியான கோவை ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு அண்ணாமலை சமூக வலைதளத்தில் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். “ஒரு காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை ஆட்சியர் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் ‘என் மன் என் மக்கள்’ யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழக கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.

பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, ஆட்சியர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் அது 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என காவல் துறை விசாரணை மூலம் அறிந்தோம். அது தேர்தல் நடத்தை விதிமீறல் கீழ் வராது என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.