சண்முகம் பெயரில் 9 பேர்… அதில் ஒருவர் திமுக வட்டச்செயலாளர் – என்ன நடக்கிறது வேலூர் தொகுதியில்?!

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான தி.மு.க-வின் கதிர் ஆனந்த், பா.ஜ.க-வின் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வின் பசுபதி, நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால், நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கிறது வேலூர் களம்.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்துவதற்காக ‘பெயர் அஸ்திரத்தை’ கையிலெடுத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில், தி.மு.க இருப்பதாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது ஏ.சி.சண்முகம் தரப்பு. வேட்பு மனு பட்டியலை அலசியபோது, ‘சண்முகம்… சண்முகவேலு… சண்முகசுந்தரம்’ என்ற பெயரிலேயே மொத்தமாக பத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், அதில் ஒன்பது வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

ஏ.சி.சண்முகம்

பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. அவரைத் தவிர்த்து பார்க்கும்போது, மற்ற அனைவருமே சுயேட்சை வேட்பாளர்களாக களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, ஏ.சி.சண்முகத்தின் இனிஷியலையும்கொண்ட வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். தந்தை பெயர் சென்னப்பன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் இரண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, இன்னொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, வாணியம்பாடி கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பி.சண்முகம், வேலூர் அருகேயுள்ள திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம், வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஜி.சண்முகம், வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம்.பி.சண்முகம் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கதிர் ஆனந்த்

இந்த பட்டியலிலுள்ள… சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளராக இருக்கிறார். சண்முகவேலு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, நாம் அவரைக் கவனித்து பின்தொடர்ந்துச் சென்றோம். அப்போது அவரை அழைத்து வந்த தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் உதவியாளர் பாபு உள்ளிட்ட மேலும் மூன்று நபர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் காரை நிறுத்திவிட்டு, அதற்குள்ளேயே அமர்ந்திருந்ததையும் நீண்ட நேரமாக கவனிக்க முடிந்தது.

ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்ற தி.மு.க வட்டச் செயலாளர் சண்முகவேலு மனுத் தாக்கல் செய்துவிட்டு திரும்பியபோது, ‘என்னக் காரணத்திற்காக வந்தீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை. சும்மா ஒரு மனு போட வந்தேன்’ என்று சொல்லிவிட்டு நேராக கதிர் ஆனந்த் உதவியாளர் அமர்ந்திருந்த கார் அருகில் சென்றார். கார் கண்ணாடியை கீழே இறக்கிய கதிர் ஆனந்த் உதவியாளர் ‘என்ன பண்ணிட்டீயா, சரி கிளம்பு’ என்றார். இதை அருகில் இருந்தபடியே கவனித்தோம். இதையடுத்து, வேட்பு மனு விவரங்களை அலசியபோது, தி.மு.க வட்டச்செயலாளர் சண்முகவேலுவும் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ததை கண்டுபிடித்தோம்.

பசுபதி

இது குறித்து, பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பிடம் விசாரித்தபோது, ‘‘வாக்காளர்களை குழப்புவதற்காக ‘சண்முகம்’ என்ற பெயரிலேயே ஆட்களை தேடிப்பிடித்து மனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கிறது தி.மு.க வேட்பாளர் தரப்பு. தேர்தல் களம் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. நாங்கள் சவாலாக இருப்பதால் தொகுதிகளில் இப்படித்தான் செய்வார்கள். வீடுதோறும் தாமரைச் சின்னத்தை கொண்டு சேர்த்திருக்கின்றோம். நாங்கள் கவலைப்படப் போவதில்லை’’ என்கின்றனர். அதேபோல, அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி களமிறக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில் வேட்பாளர் தேர்வு மிகத் தாமதமாக முடிவானது. ஆகையால்தான் என்னவோ, பசுபதி என்ற பெயர்களில் அதிக ஆட்களை பிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று நக்கலடிக்கிறது வேலூர் அ.தி.மு.க.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.