மட்டக்களப்பில் அரசாங்க அதிபர் தலைமையில்  மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.

புனித றமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருந்து அதனை முடிவுறுத்தும் 16வது நாள் இப்தார் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.எச்.எம். பசீல், தொழில் நியாயாதிக்க சபை தலைவர் வீ.எம். சியான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். எஸ். பஷீரின் ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சகல திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு நகர் வர்த்தகர்கள், மட்டக்களப்பு நகர் சலாமா பள்ளிவயாலின் நிருவாகிகள், சலாமா பௌண்டேசன் அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சலாமா பௌண்டேசன் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி மஜீதியினால் மதத்தால், இனத்தால், சமூகத்தால், நிறத்தால், இடத்தால், குலத்தால், தன்மைகளால் என பலவற்றால் உருவாகும் பன்மைத்துவம் தொடர்பாக இப்தார் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

 மேலும் காத்தான்குடியில் அமைந்துள்ள அல்-அக்ஷா வடிவிலான பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் முஅத்தின் ஏ.எல். அப்துல் அஸீஸின் அதானுடன் இப்தார் நிகழ்வு நிறைவு பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.