`வானதி சப்போர்ட்டில் வெற்றிபெறலாம் என நினைத்து மாட்டிக்கொண்டார்!'- அண்ணாமலை குறித்து கனிமொழி கருத்து

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, கனிமொழி எம்.பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, “தளபதியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும். தவறாகச் சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. 

சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என தெரிந்து, புதிய தொகுதியில் போட்டியிடுகிறார் அண்ணாமலை. வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்குபோட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. திமுக வெற்றி அசைக்க முடியாத உண்மை. எனவே, அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார் என நினைக்கிறேன்.  

தவறான விஷயங்களையும் பொய்களையும் பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. மருதமலையில் கரன்ட் தரவில்லை என்று சொன்னார்.

ஆனால் முன்னதாகவே திமுக கரன்ட் தந்துவிட்டது. நம் பிள்ளைகள் வசதியாக மரியாதையாக நல்ல வேலை கிடைத்து, அடிப்படை வசதிகளுடன் வாழ வேண்டும் என்பது, தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு. ஆனால் மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு, தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால்போதும் என்பதாக இருக்கிறது. 

சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள், பாஜக பிரமுகருக்கு எதிராகச் செயல்பட்டதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். தேர்தல் பத்திரம் ஒரு சட்டபூர்வமான ஊழல். இதில் பா.ஜ.க-வினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளால் ரெய்டு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர். 

இந்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை, முடிந்துவிடும். அப்படி ஒருவேளை விபத்து நடந்தால், இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலே நடக்காது, யாரும் ஓட்டே கேட்க மாட்டார்கள் என்று என்ன சட்டம் வேண்டுமானாலும் கொண்டு வருவார்கள். விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை இவர்கள் அமல்படுத்திருக்கின்றனர். பாஜக-வின் இது போன்ற கொடிய திட்டங்களுக்கு துணை நின்றவர்கள்தான் அதிமுக-வினர். இன்று அவர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கின்றார்.

அதனை நம்ப வேண்டாம். மக்களுக்கு நடந்த கொடுமை அனைத்துக்கும் அதிமுக-விற்கு பங்கு உண்டு. இரண்டு ஸ்டிக்கரும் சேர்ந்து மீண்டும் ஒட்டிக் கொள்ளும். திமுக தலைவர் உட்பட அனைவரும் பாஜக-வை கேள்வி கேட்கின்றனர், விமர்சிக்கின்றனர். திமுக-அதிமுக இடையே போட்டி நடைபெறுகிறது. பாஜக-வினர் பாவம், நானும் இருக்கேன் நானும் இருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.  

இதுவரை எடப்பாடி பழனிசாமி ஒரு முறையாவது பிரதமரை எதிர்த்து பேசியிருக்கின்றாரா? திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி பற்றி எப்போதாவது பேசி இருக்கிறாரா? இப்படி இருவரும் ஓட்டு கேட்டு வருவார்கள்… அவர்களை திருப்பி அனுப்பி கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.  

சிறுகுறி தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் 50,000 தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வந்த பிறகு மூடப்பட்டிருக்கின்றன. இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார். வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று சொல்கின்றார். ஜி.எஸ்.டி ஃபார்மை சரியாக ஃபில் செய்யவில்லை என்றுகூட, அதற்கு அபராதம் விதித்து சித்ரவதை செய்யும் ஆட்சி, பாஜக ஆட்சி. விவசாயிகள் கடனை ரத்து செய்யக் கூடாது என பாஜக-வினர் இருக்கின்றனர். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் ரத்து செய்து இருக்கின்றார்கள்.  

இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைக்கும்போது சிலிண்டர் விலை குறைக்கப்படும், 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என கூட்டணியின் தலைவரான அண்ணன் தளபதி அறிவித்திருக்கின்றார். பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும். 10 அடிக்கு ஒரு தடவை டோல்கேட், டோல்கேட் அனைத்தையும் இழுத்து மூடி அதற்கு ஒரு மூடு விழா நடத்துவோம் என்று நாம் அறிவித்திருக்கின்றோம். நிச்சயமாக அதனை செய்து காட்டுவோம். தமிழ்நாடு முழுவதும் 1.10 கோடி பெண்கள் கலைஞர் உரிமைத்தொகைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. அந்த திட்டத்தில் பயன்படக்கூடியவர்களில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் பெண்கள். படிப்பவர்களுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தை தந்திருக்கின்றோம். கல்லூரி படிக்கும் இளைஞர்களுக்கு தமிழ் முதல்வன் திட்டம் தரப்பட்டிருக்கின்றது. ஆனால் பா.ஜ.க என்ன செய்திருக்கின்றார்கள்… நம்ம வீட்டுப் பெண்கள் படிக்கக் கூடாது என்பதற்காக கல்விக் கொள்கையை கொண்டு வந்து நுழைவுத் தேர்வு வைத்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் அடிமையாக வைத்திருந்ததுபோல, மீண்டும் அதே நிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பாஜக-வினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அதனை தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரசாரத்தில் தெரிகிறது. கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்குச் செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றிருக்கிறது என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருக்கும் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் உருவெடுக்கும். பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்தக் கூட்டணி இங்கு மட்டுமன்றி தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஆயுஷ்மான் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருப்பதைப்போல் எங்களுக்கு செய்ய தெரியாது. மகளிர் உதவித் தொகையை 1.15 கோடி பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், அந்த திட்டம் மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. இதேபோல் காலை உணவுத் திட்டம் மக்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது. குஜராத்தில்தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும்.

கோவையில் போட்டியிடும் அண்ணாமலை 60% வாக்குகள் வாங்கலாம்… 90% வாக்குகள்கூட வாங்கலாம், கனவு காண்பது அவரது உரிமை. ஆனால் வெற்றி நிச்சயமாக எங்களுடையதுதான். ஒரு பைசாகூட ஓட்டுக்குச் செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள்… அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.