ஒரு காலத்தில் மதுரை ‘கெத்து’… இப்போது ‘ஒத்து’ – பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேச்சு

மதுரை: “பாஜக வென்றால் ரவுடித்தனம் ஒழியும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். மின் தடை இருக்காது. நல்ல சாலை, குடிநீர் கிடைக்கும்” என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேசினார்.

மதுரை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் கட்சி பாஜக. பாஜகவுக்கு ஓட்டுப்போட்டால் தான் மதுரை வளரும். மதுரையின் பெருமையை மீட்டெடுக்க வந்த கட்சி பாஜக. ஒரு காலத்தில் மதுரை என்றால் கெத்து என இருந்தது. இப்போது மதுரை என்றால் ஒத்து (ஓரமாக போ) என்கின்றனர். வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வேலைக்கு தேடி வந்தனர். இப்போது மதுரைக்காரரர்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை உள்ளது.

மதுரையில் தொழில் இல்லை, வளர்ச்சி இல்லை. இதுவரை இருந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டனர். மதுரை தொகுதியின் வளர்ச்சிக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. மக்களுக்கும் எதையும் செய்யவில்லை.

திமுகவில் 20, 30 பேர் 2 லட்சம் கோடி ரூபாய் வைத்துள்ளனர். மாநிலத்தை கொள்ளையடிக்கும் கட்சியாக திமுக உள்ளது. திமுகவுக்கு மக்கள் ஓட்டுப்போடக் கூடாது. திமுகவில் சாதாரண தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கமாட்டார்கள். திமுக குடும்ப கட்சி.

அந்த குடும்பத்தின் கொத்தடிமைக்கு தான் சீட் வழங்குவார்கள். பாஜக ஒருவரின் பிறப்பை பார்க்காமல் உழைப்பை பார்த்து வாய்ப்புகளை வழங்கும். பாஜக வெற்றிப்பெற்றால் நல்ல ரோடு வரும், குடிக்க தண்ணீர் கிடைக்கும், மின் தடை இருக்காது, ரவுடித்தனம் ஒழியும், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இட்லி விற்பவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் மோடி. ஆனால் இட்லி விற்பவர்களை குடிக்க வைக்கிறார் ஸ்டாலின். சமுதாயம் படிக்க வேண்டும் என நினைக்கிறார் மோடி. ஆனால் ஸ்டாலினோ சமுதாயம் குடிக்க வேண்டும் என்கிறார்.

டாஸ்மாக் கடைகளில் தரமான சரக்கும் விற்பதில்லை. கலப்படமான சரக்கை விற்று மக்களின் உடல் நலனை கெடுக்கின்றனர். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக பிரதமர் மோடி உள்ளார். மதுரையின் பழம் பெருமையை மீட்க பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.