“புதுச்சேரிக்கு தேவையான நிதியை பாஜக அரசு வழங்கவில்லை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதுச்சேரி: “புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், “மத்தியில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேவையான நிதியை வழங்குவது கிடையாது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரியை பொறுத்தவரையில் யூனியன் பிரதேசம். இதில் அதிகாரம் படைத்தது துணைநிலை ஆளுநர் தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நீக்க வேண்டும். புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற வேண்டும். புதுச்சேரி வேட்பாளரோடு, தமிழகத்தைச் சேர்ந்த நம்முடைய 39 மக்களவை வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். அவர்களும், புதுச்சேரி தமிழ்வேந்தனும் இணைந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து பெறுவார்கள். அது அதிமுகவால் மட்டுமே முடியும். வேறு எந்த கட்சியாலும் முடியாது.

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் நிதி பகிர்வு கிடைக்கும். மத்தியில் நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. ஆனால் மாநில அந்தஸ்து இல்லாத காரணத்தால் இந்த மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய அந்த நிதி கிடைக்காமல் போகிறது. கிட்டத்தட்ட 43 ஆண்டுகாலமாக காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் மாநிலத்தின் உரிமையை அவர்களால் மீட்க முடியவில்லை. அது அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றால் தான் மீட்க முடியும். அந்த திராணி அதிமுகவுக்கு மட்டும் தான் இருக்கிறது.

இங்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் துணைநிலை ஆளுநர் மனது வைத்தால் தான் திட்டங்கள் நிறைவேற்ற முடியும். எந்த கோப்புக்கும் முதல்வரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. புதிய சட்டப்பேரவை கட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பே கோப்பு அனுப்பப்பட்டு துணைநிலை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். அதனை இன்னும் டெல்லிக்கு கூட அனுப்பவில்லை. இது மிகப்பெரிய திட்டம், மக்களின் கனவு. அதுகூட நடக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

ஆனால் தமிழகத்தில் அப்படியல்ல. தனிமாநில அந்தஸ்து இருக்கும் காரணத்தால் தேர்நதெடுக்கப்பட்ட அரசுக்கும், முதல்வருக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் வரவேண்டும் என்று சொன்னால் அதிமுக வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகாலமாக இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. அப்படி நடத்தாமல் இருந்தால் எப்படி நகரம் முதல் கிராமம் வரை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும். அடிப்படை தேவைகள் கிடைக்க உள்ளாட்சித் தேர்தல் மிகமிக அவசியம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை வலுயுறுத்துவோம். புதுச்சேரி சுற்றுலா மையம். இங்குள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து எல்லா விமானங்களும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தினால்தான் புதுச்சேரி வேகமாக வளர்ச்சியடையும்.

இந்தியாவில் எங்கு சென்று கேட்டாலும் சுற்றுலா மையம் என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்ற மாநிலம் புதுச்சேரி. அப்படிப்பட்ட புதுச்சேரி பழைய நிலையிலேயே தொடர்கிறது. மத்தியில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேவையான நிதியை வழங்குவது கிடையாது. இங்கு தேவையான நிதி இருந்தால் தான் புதுச்சேரியை மேம்படுத்த முடியும். அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்று வரும்போது சிங்கப்பூர்போல புதுச்சேரி மாற்றியமைக்கப்படும்.

விலைவாசி உயர்ந்துவிட்டது. மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரியிலும் பரவியுள்ளது. இங்கும் போதைப்பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கை சீரழியும் சூழ்நிலையை நாம் பார்க்கின்றோம். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். 43 ஆண்டுகளாக அதிமுக தவிர மற்ற கட்சிகள் ஆளுவதால் மாநிலத்தின் வளர்ச்சி ஏற்படவில்லை. அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் எப்படி வளர்ச்சியடைந்ததோ, அதேபோன்று புதுச்சேரியும் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் 2026-ல் அதிமுக வெற்றிபெற முதல் பிள்ளையார் சுழியாக தமிழ்வேந்தன் வெற்றி இருக்க வேண்டும்.

அண்மையில் புதுச்சேரியில் போதைக்கு அடிமையாகி 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இது கடுமையான வேதனையான சம்பவம். இதற்கு காரணம் இந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் விற்பனை அதிகமாக இருப்பதுதான். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜாபர் சாதிக் என்பவர் போதைப்பொருள் கடத்தல் சம்மந்தமாக போதைப்பொருள் கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருடன் புதுச்சேரியில் சிலபேருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அப்படி உண்மையாக இருந்தால் அது கண்டனத்துகுரியது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மூலைமுடுக்கெல்லாம் ரேஷன் கடைகளை திறந்தோம். ஆனால் இங்கு ரேஷன்கடையை 10 ஆண்டுகாலமாக முடக்கி வைத்திருக்கின்றனர். இது சாதாரண விஷயமல்ல. ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி புதுச்சேரியில் மலர வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.