“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு

இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என வி.சி.க, பா.ம.க, த.வா.க போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய அரசுதான் இதை நடத்தவேண்டும் என திமுக தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. இப்படியான சூழலில், தருமபுரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், “1987-ல் வன்னியர் சமுதாய மக்களுக்கான ‘தனி இட ஒதுக்கீடு’ கேட்டு கடுமையான போராட்டம் நடைபெற்றபோது ஆட்சியிலிருந்து அதிமுக எதுவும் செய்யவில்லை. ஆனால், 1987-ல் கலைஞர் முதலமைச்சரான பிறகு வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொடுத்தார். சமூகநீதி பேசுகிற மருத்துவர் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க-வுடன் கைகோத்த மர்மம் என்ன…

ஸ்டாலின்

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசால் ‘சர்வே’ மட்டுமே எடுக்க முடியும். ‘சென்சஸ்’ எடுக்க முடியாது. இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதி போராளியான அய்யா ராமதாஸுக்குத் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ‘தெரிந்தே’ இந்த அரசியல் செய்கிறார்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில், `வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து பா.ம.க-வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை. தருமபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும்போதுதான், முதல்வர் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் மீதும், சமூகநீதி குறித்தும் திடீர் அக்கறை பிறந்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராமதாசு அய்யா ஏதேனும் வாக்குறுதி பெற்றிருக்கிறாரா? என்று வினா எழுப்பியுள்ளார்.

ராமதாஸ்

தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் தி.மு.க-வை வழிநடத்திச் செல்லும் ஸ்டாலினுக்கு இப்படி வினா எழுப்பும் அளவுக்குத் தான் அரசியல் புரிதல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது, தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசியக் கட்சி ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்போது, மாநிலக் கட்சிகள் முதன்மைக் கோரிக்கைகளை முன்வைக்கும். அவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில்தான் மத்திய அரசு செயல்படும். இதுதான் இயல்பு. முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – டி.எம் கிருஷ்ணா

நாடாளுமன்றத்தில் பா.ம.க-வை விட தி.மு.க-வுக்கு அதிக வலிமை இருந்த போதிலும் சமூகநீதிக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத இயக்கம் தான் தி.மு.க. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க-வால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளில் பா.ம.க உறுதியுடன் போராடும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மூன்று முறை சாதிவாரி வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புகளை உருவாக்கியது பா.ம.க. ஆனால், அந்த வாய்ப்புகளைக் கலைத்து வீணடித்தது தி.மு.க அரசு தான். இந்தியாவின் 6 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறுகின்றன. தி.மு.க கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறுகிறார். ஆனால், ஸ்டாலின் மட்டும் மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மீண்டும், மீண்டும் கூறுவதற்குக் காரணம் அவரது அறியாமை அல்ல…

ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற வன்மம்தான் காரணம். தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிகின்றன. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்த தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். இதற்காக ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

ராமதாஸ் – ஸ்டாலின்

ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர் போல நடிக்கிறார். ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும். ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்துக்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை தி.மு.க விரைவில் உணரும்” என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.