போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்: டெல்லியில் நாளை ஆஜராக உத்தரவு

சென்னை: டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஜாபர் சாதிக்கின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுகஅயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது முக்கிய கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா என்ற சதானந்தம் (50) சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக, அவர்கள் தொடர்புடைய 2 குடோன்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, விசாரணைக்காக ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீஸார் கடந்த மார்ச் 17-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் சென்னை மண்டலஅலுவலகத்தில் அவரிடம் 12 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தலின் பின்னணி, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், எங்கெல்லாம் போதைப் பொருள் கடத்தப்பட்டது, அதன்மூலம் கிடைத்த வருவாய் யாருக்கெல்லாம் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை போலீஸாரிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள் ளது. முதல் கட்டமாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவுஅலுவலகத்தில் ஏப்ரல் 2-ம் தேதி (நாளை) நேரில் ஆஜராகுமாறு போலீஸார் அவருக்கு சம்மன் (அழைப்பாணை) அனுப்பி உள்ளனர். இதேபோல, ஜாபர் சாதிக்கின் தொழில் பங்குதாரர்களான அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியபோது, ‘‘போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இதுவரை ஜாபர் சாதிக்உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாபர் சாதிக் கடந்த 2013-ம்ஆண்டிலேயே சென்னையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவருடன் தொழில் தொடர்பில் இருந்தவர்கள், புதிதாக தொடங்கப்பட்ட தொழில்கள், அதன் பங்குதாரர்கள் என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் இயக்குநர் அமீர், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் பாசித்புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய3 பேருக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது’’ என்றனர்.

போதைக்கு எதிரான கொள்கை: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் தலைமறைவானபோதே, இயக்குநர் அமீரின் பெயர் அடிபடத் தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலையில்அமீர் நடத்தி வரும் உணவகத்தில் ஜாபர் சாதிக்கும் பங்குதாரர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘‘போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர் ஜாபர் சாதிக் என்று எனக்கு தெரியாது.

நான் போதை பழக்கங்களுக்கு எதிரான கொள்கை உடையவன்’’ என்று இயக்குநர் அமீர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக விசாரணைகளுக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை அமீர் இயக்கி உள்ளார். மேலும், சென்னை புரசைவாக்கத்தில் ஒரு நிறுவனத்தை ஜாபர் சாதிக் கடந்த 2021- ஆண்டு தொடங்கி இருந்தார். இந்த நிறுவனத்தின் பங்குதாரராக அமீர், அப்துல் பாசித் புகாரி உள்ளனர். அதேபோல, வேறொரு தொழிலில் ஜாபர் சாதிக்குடன் இணைந்து செயல்பட்டு வந்தவர் சையத் இப்ராஹிம் என்று கூறப்படுகிறது.

அந்த அடிப்படையிலேயே அமீர் உள்ளிட்ட 3 பேருக்கும் மத்திய போதைப் பொருள்தடுப்பு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதேபோல, ஜாபர் சாதிக்கின் மற்ற தொழில் கூட்டாளிகள், அரசியல் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து சம்மன் அனுப்பப்பட உள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.