‘வேகத்தில் திருப்தி… சேவையில் அதிருப்தி’ – இந்தியாவில் 5ஜி சேவை குறித்த ஆய்வுத் தகவல்

சென்னை: உலக நாடுகளில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2022 அக்டோபரில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பரவலாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாடு குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டில் 5ஜி சேவை கிடைக்கப் பெறுவது குறித்த தகவல், அதன் இணைப்பு வேகம், டவுன்லோட் வேகம் மற்றும் பயனர் திருப்தி போன்றவை இதில் அடங்கியுள்ளது. 5ஜி சேவையில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி டவுன்லோட் வேகத்தை பொறுத்தவரையில் உலக அளவில் 14-வது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த டவுன்லோட் வேகத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நொடிக்கு 301.86 மெகாபைட் என டவுன்லோட் வேகம் இருந்துள்ளது. அப்லோட் வேகம் நொடிக்கு 18.93 மெகாபைட்டாக உள்ளது. அதே போல கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் 5ஜி சேவை கிடைக்க பெறுவதும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இருந்தும் கஸ்டமர் கேர், விலை மற்றும் சேவையின் தரம் போன்ற காரணங்களால் 5ஜி சேவையை பயன்படுத்தும் பயனர்கள் திருப்தி அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 5ஜி சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது. இதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 விலைக்குள் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5ஜி பயனர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல 5ஜி சேவையை வழங்கும் டெலிகாம் நிறுவனங்களில் ஜியோ முன்னணியில் உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் இந்தியாவில் 4 லட்சம் 5ஜி பேஸ் ஸ்டேஷன் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் 5ஜி சேவை கட்டமைப்பில் வேகமான முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.