Hero bikes – 56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

இந்தியாவில் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டு மொத்தமாக 2023-2024 நிதியாண்டில் சுமார் 56,21,455 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 53,28,546 இரு சக்கர வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பீடுகையில் 5.49% வளர்ச்சி  அடைந்துள்ளது.

ஆனால் கடந்த மார்ச் 24 விற்பனையில் 4,90,415 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்து முந்தைய மார்ச் 2023 உடன் ஒப்பீடுகையில் 5.57%. வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் நெ.1 பைக் தயாரிப்பாளராக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் 2023-2024 ஆம் நிதியாண்டில் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியுடன் அறிமுகம் செய்யப்பட்ட X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய பிரீமியம் பைக்குகளுடன் ஹீரோவின் கரீஸ்மா XMR 210, புதிய Xtreme 125R போன்ற மாடல்கள் இந்த ஆண்டு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற முக்கிய காரணமாக அமையலாம்.

மேலும், ஸ்கூட்டர் சந்தையில் வெளியிடப்பட்ட ஜூம் 110 உட்பட வரவுள்ள ஜூம் 125 மற்றும் ஜூம் 160 ஆகியவை சிறப்பான பிரீமியம் மாடலாக அமையலாம். இந்நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற ஹீரோ வீடா எலக்ட்ரிக் 23-24 ஆம் நிதியாண்டில் சுமார் 17,558 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

தொடர்ந்து ஹீரோ வீடா டீலர்கள் மற்றும் பிரீமியம் ஹீரோ ப்ரீமியா டீலர்கள் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றது. மேலும் வெளிநாடு சந்தைகளில் இருந்து வருமானம் 16 % அதிகரித்துள்ளது. கூடுதலாக இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல்வேறு புதிய நாடுகளில் ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.