தேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் வீடியோ வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜனதா தனது பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்துவதற்காக திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பா.ஜனதா மீண்டும் மீண்டும் தீங்கிழைக்கும் விதத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கீழ்தரமான இந்த பிரசாரத்தை தயாரித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அதை திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகளை வெளியிடவும் தேர்தல் கமிஷனிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடைபெறும் ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது குறித்தும் தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அங்கு மாநில அரசின் திட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் இன்னும் மாநில முதல்-மந்திரியின் புகைப்படங்கள் இருப்பது புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.