சஞ்சய் நிருபம் காங்கிரசில் இருந்து நீக்கம்; சிவசேனாவில் இணைவாரா?

புனே,

காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் நிருபம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சியில் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார். சமீபத்தில், மும்பையின் வடக்கு தொகுதி பற்றி ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் மிரட்டல் விடும் வகையில் பேசியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் கூறும்போது, சஞ்சய் நிருபமுக்கு எதிரான ஒழுங்கீன புகார்கள், கட்சி விரோத அறிக்கைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, உடனடியாக அவரை கட்சியில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீக்குவதற்கு கட்சி தலைவர் ஒப்புதல் அளித்து விட்டார் என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சஞ்சய் நிருபம் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில், காங்கிரஸ் கட்சி எனக்காக சக்தியையும், காகிதங்களையும் வீணடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக கட்சியை காப்பாற்ற அதனை பயன்படுத்தட்டும். எப்படியானாலும் கட்சி, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்க போகிறது. நான் கொடுத்த ஒரு வார அவகாசம் முடிந்து விட்டது. அதனால், இன்று நானாக ஒரு புதிய முடிவை எடுக்க போகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

அவர் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. சஞ்சய், காங்கிரசில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார். மும்பையில் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஷிண்டேவின் சிவசேனா அவருக்கு ஒரு தொகுதியை வழங்கலாம் என தெரிகிறது என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர், கடந்த 2009-ம் ஆண்டு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானவர். ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரசை ஓரம் கட்டும் நோக்கத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் சஞ்சய் கூறியது கவனிக்கத்தக்கது. இதனால், அக்கட்சியில் அவர் சேர கூடிய வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.