Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு?

Doctor Vikatan: உடல் எடை அதிகரிப்புக்கும் கால் வலிக்கும் என்ன தொடர்பு? உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இந்த வலி குறையுமா? மூட்டுவலிக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்  

ஷீபா தேவராஜ்

கால் வலி என நீங்கள் குறிப்பிட்டிருப்பது மூட்டுகளையும் சேர்த்து என்று தெரிகிறது. கணுக்கால்களையும் சேர்த்துச் சொல்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். மூட்டுகளின் இணைப்பை ‘சினோவியல் ஜாயின்ட்’ ( synovial joint ) என்று சொல்வோம்.

உடல் எடை அதிகரிக்கும்போது, இந்த இணைப்புகளின் மீது அழுத்தம் கூடும். அதாவது இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியில் எடை அதிகரிக்க, அதிகரிக்க, அதன் அழுத்தம் மூட்டுகளில் பிரதிபலிக்கும். அதேபோல கணுக்கால் மூட்டுகளிலும் அழுத்தம் கூடும். அதன் விளைவாக வலி ஏற்படும். அதனால்தான் இதை ‘விஷியஸ் சைக்கிள்’ ( vicious cycle) என்று சொல்வோம். அதாவது வலி இருந்தால் உங்களால் நடக்கவோ, ஓடவோ முடியாது. நீங்கள் நடக்காமல், ஓடாமல் இருந்தால் உங்களுக்கு மறுபடி வலி வரும். 

 மூட்டுவலி

உடல் பருமன் அதிகரித்ததை நீங்களே உணர்கிறீர்கள் என்ற பட்சத்தில், முதல் வேலையாக உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைத்து, வலி குறைந்ததும்  நடைப்பயிற்சியைத் தொடங்கலாம். நடக்க ஆரம்பித்ததும்  மெள்ள மெள்ள வலி குறையத் தொடங்கும். கால்வலி, குறிப்பாக கணுக்கால்களில் வலி ஏற்படுவது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதன் அறிகுறியாகவும் இருக்கலாம். மூட்டுவலி என்பது எல்லோருக்கும், உடல் பருமனால்தான் ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை.  நீங்கள் உடற்பயிற்சிகள் செய்பவராக இருந்தால், ‘சோர்னெஸ்’  ( soreness ) காரணமாக ஏற்படும் வலியாகவும் அது இருக்கலாம். 

மூட்டுவலி என்பது உடல் பருமனால் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  இப்படி எந்தக் காரணமும் இல்லை, ஆனாலும், கால்கள் முழுக்க வலிக்கின்றன என்றால் அது நீர்வறட்சி மற்றும் சத்துக்குறைபாடு காரணமாக இருக்கக்கூடும். எனவே, உங்கள் விஷயத்தில் கால் வலிக்கான காரணம் உடல் பருமன்தானா அல்லது வேறெதுவுமா எனத் தெரிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.