“விரைவில் சந்திப்போம்” – திகார் சிறையிலிருந்து தொகுதி மக்களுக்கு மணீஷ் சிசோடியா கடிதம்!

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சிபிஐ, மணீஷ் சிசோடியாவை கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மக்களை விரைவில் வெளியில் சந்திப்பேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகாரத் திமிரை கொண்டிருந்தனர், அவர்கள் மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பினார்கள். பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் எனக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.

நாட்டின் சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம் இருந்தபோதிலும் சுதந்திரக் கனவு நனவாகியது. அதேபோல், ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாள் நல்ல கல்வியைப் பெறுவார்கள். வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என் மனைவியை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். சீமா உங்கள் அனைவரையும் பற்றி பேசி உணர்ச்சி வசப்பட்டார். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், இந்த வழக்கில் கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு அண்மையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.