முதியோர் ஓய்வூதியம் உயர்வு, அமைச்சகங்கள் குறைப்பு: பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், தமது ஆட்சி 3-வது முறையாக தொடரும் என்றுநம்பிக்கை தெரிவித்திருந்தார். புதிதாக அமையும் ஆட்சியில் அடுத்த100 நாட்களுக்கான புதிய திட்டங்களை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன்படி, புதிய ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை தற்போதைய 37 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

சமீப காலங்களில் அறிமுகமான மின்சார வாகனங்கள் இன்னும்கூட மக்களிடையே பிரபலமாகவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவற்றை முழுமையாக ஆராய்ந்து சரிசெய்து, மின்சார வாகனங்கள் விற்பனையை 7 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் நீதிமன்றங்களில் பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலுவை வழக்குகளும் 5 கோடிக்கும் மேலாக உயர்ந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் அரசு முனைப்பு காட்ட உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நிலுவை வழக்குகளை ஒரு கோடியாகக் குறைக்கவும் இதற்கு நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை 22 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் திட்டம் வகுக்கப்படுகிறது.

ராணுவ பட்ஜெட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு மத்திய அரசு இதனை 2.4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களின் உள்ளூர் தயாரிப்புகள் பலன் தரும் என கருதப்படுகிறது. இதன் ஏற்றுமதி அதிகரிப்பால் சர்வதேச அளவில் இந்திய ஆயுதங்களின் மதிப்பு உயரவும் வாய்ப்புள்ளது.

பல நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சகங்கள் அதிக பணிகளை செய்து வருகின்றன. சீனாவில் 26, பிரேசிலில் 23, அமெரிக்காவில் 15 என அமைச்சகங்கள் உள்ளன.

ஆனால், இந்தியாவில் 54 அமைச்சகங்கள் செயல்படுகின்றன. இதனால் அரசுக்குசெலவும் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்தி அரசுப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சகங்களின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.