‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்காக இபிஎஸ் வடிப்பது நீலிக் கண்ணீர்!’ – திமுக விமர்சனம்

சென்னை: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக்கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” என்று திமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் நாள் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக்கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப் படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து , அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப் படுத்தினார். ஆனால், இன்றைக்கு அவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக்கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

ஆனால், திமுக அரசு எல்லாக் காலத்திலும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது. அரவணைத்து வருகிறது.மறைந்த முதல்வர் கருணாநிதி 19 ஆண்டுகால முதல்வ்ர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார். இதனை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்பது பழனிச்சாமியின் நோக்கம் அல்ல. | விரிவாக வாசிக்க < வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் மயங்க மாட்டார்கள்: பழனிசாமி கருத்து

திமுகவுக்கு அவர்கள் அளித்தும் வரும் ஆதரவைக் கண்டு பொறுக்கமுடியாமல் அதைக் கெடுக்க வேண்டும் என்று குள்ளநரித் தனமாக, நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும். உலகில் எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு கையெழுத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்தார்களே; வீடுகளில் இருந்த பெண்களைக்கூட பெண் பணியாளர்கள், பெண் ஆசிரியர்களைக்கூட வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லாம் எல்லோரும் அறிவார்கள். இதைச் செய்ததெல்லாம் அதிமுக ஆட்சிதானே.

அவர்கள் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்கு தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்ய வைத்து அத்தனைபேரையும் மீண்டும் பணியில் சேரவைத்த பெருமை திமுகவுக்கு உண்டு.

எப்போது போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கைது செய்து வேலை நீக்கம் செய்வது அவர்களுக்கு வாடிக்கை. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமையும் காலங்களில், அதிமுக அரசால் பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனைகளை ரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து வந்துள்ளதும் திமுக அரசுதான் என்பதனை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989-ல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசுதான். இதைப்போல அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திமுக அரசு அமைந்த காலங்களில் வழங்கிய சலுகைகள் குறித்து ஆண்டுவாரியாக ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு எண்ணற்ற சலுகைகள் வழங்கியது.

4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதானே.அதே வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார்கள். முதல்வரால் மகளிர்க்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 40 விழுக்காடாக உயர்த்தியுள்ளார்.

பழனிச்சாமி அரசு ஏற்படுத்திவிட்டுபோன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தடையின்றி நிறைவேற்றிவரும் முதல்வர் மத்திய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறது என்பதுடன் அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும். எனவே, பழனிச்சாமியின் நீலிக் கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்று திமுக தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.