பிரதமர் மோடி இன்று வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று மாலை சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்துக்கு 5 முறை வந்த பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், பாஜக பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்கிறார்.

இன்று மாலை 6 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடி, தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அப்போது, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.வி.பால கணபதி, பெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

இன்று இரவு கிண்டி ராஜ்பவனில் தங்கும் பிரதமர் மோடி, நாளை (10-ம்தேதி) காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் வேலூர் செல்கிறார். வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், மதியம் 12.50 மணிக்கு கோவை வரும் மோடி, 1.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை,எல்.முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்து, மதியம் 3.05 மணிக்கு மகாராஷ்டிரா செல்கிறார். பின்னர், அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் வரும் மோடி, மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வை முன்னிட்டு சென்னை பெருநகரில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். பிரதமரின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.