பிளாஷ்பேக் : 22 படங்களுக்கு இசை அமைத்து, 43 வயதில் மரணமடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ராஜகோபால குலசேகர் என்கிற ஆர்.கே.சேகர். மலையாள பட இசை அமைப்பாளர். ரகுமானின் தாத்தா ராஜகோபால பாகவதர் பஜனை பாடகர். மயிலாப்பூர் காபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பஜனை பாடி வந்தார். அதன்பிறகு மலையாள நாடகங்களுக்கு இசை அமைத்தார். தனக்கு உதவியாக ரகுமானின் தந்தை சேகரை அவர் அழைத்து சென்றார். அந்த அறிமுகத்தில் பின்னாளில் சேகர், எம்.கே.அர்ஜுனன், எம்.பி.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்ளுக்கு உதவியாளராக இருந்துள்ளார்.

1964ம் ஆண்டில் முதன்முதலாக 'பழஸிராஜா', என்ற மலையாளப் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு ஆயிஷா, டாக்ஸி கார், யுத்த பூமி, திருவாபரணம், தாமிரபரணி, வெளிச்சம் அகலே, குட்டிச்சாத்தான், பெண்படா, தாமரத்தோணி, பிரியே நினக்கு வேண்டி, பட்டாபிஷேகம், கண்டவருண்டோ, மிஸ் மேரி உள்ளிட்ட போன்ற 22 படங்களுக்கு இசையமைத்தார். 1977ம் ஆண்டில் வெளிவந்த ‛சோட்டாணிக்கரை அம்மே' என்ற படமே இவர் இசையமைத்த கடைசிப்படம். இப்படத்தில் முழு வேலைகளும் முடிக்கப்படாதிருந்த நிலையில் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படம் வெளியான அன்று மரணமடைந்தார்.

இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர், கஸ்தூரியை மணந்தார். இந்து சமூகத்தைச் சேர்ந்த கஸ்தூரி கணவர் மறைவுக்கு பிறகு இஸ்லாம் மதத்தை தழுவி தனது பெயரை கரீமா பேகம் என்று மாற்றினார். தனது பிள்ளைகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.ரெஹனா, பாத்திமா ரபீக், இஷ்ரத்காத்ரே என்று இஸ்லாமிய பெயர்களை சூட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.