விருதுநகர்: `வாக்காளர் அட்டையைத் திரும்ப ஒப்படைக்குறோம்… வேற வழி தெரியல!' – பி.ஏ.சி.எல் முகவர்கள்!

தமிழகத்தில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வந்த பி.ஏ.சி.எல். நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் முதலீட்டை திருப்பி தரவில்லை என எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.ஏ.சி.எல் வாடிக்கையாளர்கள், முகவர்கள் அனைவரும், மக்களவை தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்பதற்காக வந்திருந்தனர்.

இது குறித்து குழு முகவர் காளிதாஸ் நம்மிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமான நபர்களுடன் இயங்கி வந்த பி.ஏ.சி.எல் நிதி நிறுவனம், வாடிக்கையாளர்கள் கொடுத்த பணத்தை திருப்பி தர மறுக்கிறது. இது தொடர்பான வழக்கில் வாடிக்கையாளர்கள் பணத்தை நிதி நிறுவனம் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் இதுவரை எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள்

எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சார்பில், அரசு அதிகாரிகள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என பலதரப்பட்ட நபர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் பதில் தரவில்லை. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் விவசாய முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பணம் மீட்பு குழு கூட்டத்தில் பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தரவேண்டிய முதலீட்டு தொகையினை எந்த அரசியல் கட்சியினர் திரும்பப் பெற்று தருவதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கே தேர்தலில் ஆதரவு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அனுப்பி இருந்தோம்.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விவசாய முன்னேற்ற சங்கத்தின் அந்த தீர்மானத்துக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் செவிசாய்க்கவில்லை. எனவே பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தரவேண்டிய முதலீட்டு தொகையினை திருப்பித்தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்காத யாருக்கும் நாங்கள் வாக்களிக்க போவதில்லை. எனவே, தமிழகத்தில் பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்தில் முகவராகவும், வாடிக்கையாளராகவும் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்திருக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்திருக்கிறோம்” என்றனர். தொடர்ந்து அவர்கள் புகார் மனுவுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டையையும் மனுப்பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

மனு பெட்டியில்…

இதேபோல், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா வடக்கு மலையடிபட்டியில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பெண்கள், “வடக்கு மலையடிப்பட்டியில் வாழும் பட்டியலின சமூக மக்கள் பகுதிக்கு இதுநாள்வரை குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவில்லை‌. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசிச் செல்கின்றனர். ஆனால் உருப்படியாய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கு கிடைக்க பேறுகால நிதி உதவி உள்பட சுகாதாரமான குடிநீர் என எதுவும் கிடைக்காததால் இங்கு வாழும் பட்டியலின மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். நோய்வாய்பட்டோர், முதியவர்கள், கர்ப்பிணிகள் என பலதரப்பட்ட மனிதர்களும் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே தண்ணீர் குடங்களை சுமந்து செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமையினை மாற்றுவதற்கு யார் நடவடிக்கை எடுக்கிறார்களோ அவர்களுக்கே வருகின்ற தேர்தலில் ஆதரவளிக்க முடிவு செய்திருக்கிறோம். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வடக்குமலையடிப்பட்டி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்” என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.