வேலூர்: ‘‘நான் விரித்த கம்பளத்தில்தான் மோடி வருகிறார்!’’ – சொல்கிறார் கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுப் பேசுகிறார். வேலூர் அருகேயுள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோட்டை மைதானத்தை வந்தடைகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வேலூர் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பிரதமரின் வருகைக் குறித்து நம்மிடம் பேசிய வேலூர் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், ‘‘மோடியின் முகத்தைப் பார்த்தால், மக்களுக்கு இன்னும் கோபம்தான் வரும். இன்னொரு கட்சியின் தலைவரையோ அல்லது வேட்பாளரையோ விமர்சிக்க மாட்டேன். நான், அப்படிப்பட்டவனும் அல்ல.

கதிர் ஆனந்த்

அவர் வரட்டும். பிரசாரம் பண்ணட்டும். என்ன நியாயத்தைச் சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம். வேடிக்கை என்னவென்றால், வேலூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கப் போகிறார் பிரதமர் மோடி. பேப்பரில் இருந்த அந்த ஏர்போர்ட்டை தூசித் தட்டி ஏர்போர்ட்டாக உருவாக்கிக் கொடுத்தது, இந்த கதிர் ஆனந்த் தான். முன்பு இருந்த அ.தி.மு.க ஏர்போர்ட்டுக்கு தடை விதித்தது. இன்று இருக்கின்ற தி.மு.க அரசுதான் துணை நின்று… நிலத்தை கையகப்படுத்தி ஏர்போர்ட்டாக மாற்றிக்கொடுத்தது. இப்போது, காம்பவுண்ட் கட்டப்பட்டு… ரன்வே விரிவாக்கம் செய்து… டெஸ்ட் டிரைவ், டெக்னிக்கல் அனுமதியும் வாங்கி கமர்ஷியல் லைசென்ஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

இதைச் செய்து கொடுத்ததும், இந்த கதிர் ஆனந்த் தான். அதில்தான் மோடி வந்து இறங்குறார். அங்கு இறங்கி ரோட்டில் வரப்போகிறார். அந்த ரோட்டையும் எங்களுடைய மாநில அரசுதான் போட்டுக்கொடுத்தது. பிறகு நஹாய் வழியாக கோட்டை வெளி மைதானத்துக்கு வருகிறார். அந்த ‘கோட்டை மைதானம் மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கக் கூடாது’ என்று அவர்களின் தொல்லியல்துறைதான் ‘சீல்’ வைத்தது.

கதிர் ஆனந்த்

பண்டித ஜவஹர்லால் நேரு, அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் ஸ்டாலின் வரை பலரும் இந்த மைதானத்தில் பேசியிருக்கிறார்கள். பாரம்பர்யமிக்க இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்று நான்தான் பார்லிமென்ட்டில் பேசி, அனுமதி வாங்கிக்கொடுத்தேன். இப்போது, பொதுக்கூட்டங்களும், பொருட்காட்சிகளும் நடக்கின்றன. அந்த இடத்தில்தான் மோடியும் வந்து பேசப்போகிறார். எனவே, நான் விரித்த கம்பளத்தில்தான் மோடியும் நடந்து வரப்போகிறார். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது. மக்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மக்களை வதைக்கின்ற அரசாக இருக்கிறது. மக்களை நாசப்படுத்தி நசுக்கினால், ஒருகட்டத்தில் ‘புரட்சி’ உண்டாகும். சாது மிரண்டால் நாடு தாங்காது. ஆகையால், பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க மக்கள் மீண்டும் விடமாட்டார்கள்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.