செய்தித் தெறிப்புகள் @ ஏப்.11: ராமதாஸ் எச்சரிக்கை முதல் விஜய் கட்டிய கோயில் வரை!

வன்னியர் இட ஒதுக்கீடு – ராமதாஸ் எச்சரிக்கை: “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அமித் ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ ரத்து: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறார். இரண்டு நாட்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், அவரது பிரச்சாரத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நடத்த விருந்த அவரது ரோடு ஷோ பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், தென்காசியில் அவர் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, சிவகங்கை பாஜக வேட்பாளரான தேவநாதன் யாதவ் மீது பண மோசடி குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழகம் எதிலும் முதலிடம்” – திமுக பட்டியல்: தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி. 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக உள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது.

“என் மீதான பயத்தால் நாதக சின்னம் பறிப்பு” – சீமான்: “70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக அதிமுகவுக்கு இரட்டை இலை. கை சின்னத்தில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜகவும் போட்டியிடுகிறது. பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை எடுத்துக் கொண்டனர். விவசாயி சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக்கூடாது என்ற பயம்” என்று நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

“ஜூன் 4-ல் கொங்கு மண்டலம் யாருக்கு எனத் தெரியும்”: “ஜூன் 4-ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். ஊழல் பல்கலைகழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும். ஸ்டாலின் என்று பெயர் வைத்தால் அதற்கு வேந்தராக மோடி இருப்பார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “விக்ரம் படத்தில் போதைப்பொருள் விற்கும் ரோலக்ஸ் பெயரை குழந்தைக்கு வைக்கிறார் உதயநிதி” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

“22 பெரும் பணக்காரர்களிடம்…” – ராகுல் பேச்சு: நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் 22 பெரும் பணக்கார்களிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பெருமிதம்: உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்” என்று பேசினார்.

‘யார் சர்வாதிகாரி?’ – காங்கிரஸுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி: பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் அழைப்பதற்கு பதில் கூறும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், நெருக்கடி நிலை கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார் அப்போது “எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த எனக்கு, எனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோல் கூடத் தரப்படவில்லை. ஆனால், இன்று எங்களை காங்கிரஸ் கட்சியினர் சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று சாடினார்.

“பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்” – மம்தா திட்டவட்டம்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவுவேடு , பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தேர்தல் நேரத்தில் சிலர் கலவரத்தை உருவாக்க முயல்வார்கள். சதிக்கு இரையாகி விடாதீர்கள். டெல்லியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

தாய் ஷோபாவுக்காக விஜய் கட்டிய கோயில்!: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

இது குறித்து ஷோபா சந்திரசேகர் பேசும்போது, “ரொம்ப நாளாக ஒரு பாபா கோயிலை எங்கள் இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருந்தேன். அதற்கேற்ப அவரும் கட்டிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு வந்து தரிசனம் செய்துவருகிறேன்” என்று கூறியுள்ளார்.

பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் கைது: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியாவின் அண்ணன் வைபவ் பாண்டியா, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.4 கோடி மோசடி செய்த காரணத்துக்காக அவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி: “கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா என காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. அப்படி என்றால், யாரும் வசிக்காத இடம் என்றால், அதனை கொடுத்துவிட காங்கிரஸ் துணியும் என அர்த்தமா? ராஜஸ்தானில் பாலைவனம் உள்ளது. இது குறித்து காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது? இதற்கு யாராவது உரிமை கோரினால் காங்கிரஸ் என்ன சொல்லும்?” என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

“சிஏஏ விவகாரத்தில் மவுனம் காக்கும் காங்கிரஸிடம் இருப்பது பாஜக மனநிலை!”: “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கும் மவுனத்துக்குக் காரணம், அதற்கு இருக்கும் பாஜக மனநிலைதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஊழலுக்கானது காங்கிரஸுக்கான வாக்குகள்!” – எடியூரப்பா: காங்கிரஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பது அராஜகம், பொருளாதார திவால், ஊழல், உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கானவையாக இருக்கும் என்றும், அது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் என்றும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் முயற்சி…!” – பழனிசாமி ஆவேசம்: கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது, அது வேற விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனி போல இயங்குகிறது” என்று ஆரணியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.