பதஞ்சலி விளம்பர சர்ச்சை: பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

புது டெல்லி: பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. அதோடு, ‘இந்த வழக்கில் நாங்கள் தயவு காட்ட விரும்பவில்லை’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

பதஞ்சலி விளம்பர விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் அண்மையில், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரித்த உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பதஞ்சலி விளம்பர விவகாரத்தில் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. உங்கள் பிரமாணப் பத்திரத்தை ஏற்க நாங்கள் மறுக்கிறோம்.

நாங்கள் எதையும் கவனிக்காமல் இல்லை, நாங்கள் இந்த வழக்கில் தயவு காட்டவும் விரும்பவில்லை. மன்னிப்பு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது. இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. பாபா ராம்தேவ், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது. இதுதொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கரோனா, சர்க்கரை நோய்,ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிறுவனம் அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டது. இதையடுத்து பதஞ்சலி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, பதஞ்சலி மற்றும் அதன் நிறுவனர்கள் பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பல்வீர் சிங், விபின் ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பிரமாண பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. பாலகிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் எங்கே’’ என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து இருவரும் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.

இந்தச் சூழலில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தனித்தனியே பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறி, பதஞ்சலி நிறுவனம் சாா்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; இந்த தவறுக்காக மிக வருந்துகிறேன். எதிா்காலத்தில் இதுபோல் நிகழாதென உறுதியளிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை மீறும் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை’ என்று ராம்தேவ் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் புதன்கிழமை (ஏப்ரல் 10) இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.