பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வோருக்கு ரூ.41½ லட்சம் பரிசு – உலக சம்மேளனம் அறிவிப்பு

மொனாக்கோ,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை- ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ 41½ லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உலக தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் போட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த முதல் சர்வதேச விளையாட்டு சம்மேளனம் இது தான். இந்த வகையில் 48 தடகள பிரிவில் தங்கம் வெல்வோருக்கு இந்த தொகை கிடைக்கும். 4 பேர் கொண்ட தொடர் ஓட்டத்தில் வெற்றி பெறுவோர் இந்த தொகையை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

இது குறித்து உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ கூறுகையில் ‘ஒலிம்பிக் தடகள சாம்பியன்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது உலக சம்மேளனத்துக்கும், ஒட்டுமொத்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கும் மிக முக்கியமான தருணமாகும். ஒலிம்பிக்கின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் வீரர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் வெள்ளி, வெண்கலம் வெல்வோருக்கும் பரிசுத்தொகை வழங்க உறுதிபூண்டுள்ளோம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.