“சீனாவுக்கு சென்றுவிட நினைக்கிறேன்” – சீமான் பிரச்சாரம் @ ஆரணி

திருவண்ணாமலை: “அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள், சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று, சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

ஆரணி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பாக்கியலட்சுமியை ஆதரித்து சேத்துப்பட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்.12) மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து வரி வசூல் செய்து வருகின்றனர். வாகனங்கள் வாங்கும்போது வரி வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தை கொண்டு சாலை அமைக்க வேண்டியதுதானே. 10 ஆண்டுகள் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலிக்கப்படும் என்ற பெயர் பலகை உள்ளதா?. சாலையை கூறு போட்டவர்கள், நாட்டையும் கூறுபோடுவார்கள். இதனை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுக்கின்றனர்.

ஒரு கட்சி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர்கள் செய்யும் தவறுகளை சகித்துக்கொள்வதுதான் தேசப்பற்று என்றால், அது என் காலணிக்கு சமம் என சுபாஷ் சந்திரபோஸ் கூறினார். அநீதியை எதிர்க்காமல் அடிமையாக உள்ளீர்கள். ரூ.500, ரூ.1000-க்கு கையேந்த வைத்ததுதான் 60 ஆண்டு திராவிட ஆட்சியின் சாதனை. சலுகை, போனஸ், மானியம், இலவசம் இதை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. இலவச அரிசி, தாலிக்கு அரை பவுன் தங்கம், இதுதான் வளர்ச்சியா?. சாதனையா?. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் கல்வியின் தரம் உயரவில்லை.

எஸ்சிஎஸ்டி மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, வாக்கு வங்கி அரசியலுக்காக மகளிருக்கு மாதம் 1000 ரூபாயாக திமுக அரசு வழங்குகிறது. குடிக்க வைத்து மக்களை படுகொலை செய்கின்றனர். சாராயம் விற்பது சாத்தானின் செயல். ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்கின்றனர். கேரள மாநிலத்தை போன்று தமிழகத்தில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக, பிள்ளைகளை அறிவு சார்ந்த சமூகமாக மாற்ற போகிறோம் என்று சொல்லாமல், சாராய விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை என அமைச்சர் பேசுகின்றார்.

பைபிள், குரான், பகவத்கீதை இருந்தும் அநீதிக்கு துணை போகிறோம். என்ன செய்ய முடியும் என கேட்கிறீர்கள். உங்களுடைய ஒரு வாக்கை நல்லவருக்கு போடுங்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி, இந்தி தெரியாது போடா என்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் வெல்கம் மோடி, இந்திக்காரர்களே வாருங்கள் என்பார்கள். இதில் திமுக பரம்பரை என சொல்லிக் கொள்கின்றனர். திருட்டு ரயிலில் வந்த பரம்பரைதானே. 29 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்கள், நாட்டை கட்டமைத்தனர். 60 ஆண்டு திராவிட ஆட்சியில் என்ன செய்தார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. கருணாநிதியின் வீடு வளர்ச்சிக்கும், வாழ்க்கை வளர்ச்சிக்கும் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுவிட்டது. பாஜக வெளியிடவில்லை. வெளியிட்டால், 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு யார் பதில் அளிப்பது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பசுமாடு, ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான், பாரத் மாதா கி ஜெ என்பதுதான். திராவிட கட்சிகளுக்கு சாதி, மதம், சாராயம், பணம் மட்டுமே குறிக்கோள்.

இந்தியாவில் அதிகளவில் ரத்ததானம் செய்த ஓரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். கத்தி கத்தி போராடிவிட்டேன். மாற்றம் ஏற்படவில்லை. பாஸ்போர்ட் இருந்தால், எனது இரண்டு பிள்ளைகள், மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பேன்.

அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து, சீன மொழியில் பெயர் வைத்துவிட்டது. அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள், சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று, சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன். வாக்குக்கு பணம் கொடுக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்றால் வரலாற்று புரட்சி ஏற்படும். மாற்றம் என்பதுதான் மானுட தத்துவம். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.