உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்த சீனா… அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

நியூயார்க்,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா 2 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியா தன்னுடைய நாட்டில் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்ய சீனா உதவி செய்து வருகிறது. இதற்காக கூட்டாக இரு நாடுகளும் பணியாற்றி வருகின்றன என அமெரிக்கா கூறியுள்ளது.

இதுபற்றி சி.என்.என். வெளியிட்ட செய்தியில், ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் ஒரு விரிவான பாதுகாப்பு தளம் அமைப்பதற்கான நோக்கத்துடன் ரஷியா பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ உற்பத்தியை விரைவுப்படுத்தும் வகையில், சீனா அதற்கு உதவியாக செயல்படுகிறது.

இதுபற்றி அமெரிக்க ஐரோப்பிய படைகளுக்கான தளபதி ஜெனரல் கிறிஸ் கவோலி கூறும்போது, உக்ரைன் மீது படையெடுத்து 2 ஆண்டுகளான நிலையில், ராணுவ கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கி அதில் முற்றிலும் வெற்றியடைந்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்புக்கு முன் இருந்ததுபோல், தன்னுடைய திறனை பெரிய அளவில் மீண்டும் வளர்த்தெடுத்து உள்ளது. இந்த விரைவான வளர்ச்சிக்கு சீனாவே பெரிய அளவில் பொறுப்பு வகிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷியா இடையேயான இந்த ஆழ்ந்த உறவால், 2023-ம் ஆண்டில் ரஷியாவுக்கு தேவையான மின்னணு பொருட்கள் சீனாவிடம் இருந்து 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்தி, ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை ரஷியா தயாரித்துள்ளது என அமெரிக்காவின் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்

இதுபோன்ற பாதுகாப்பு பொருட்கள் மட்டுமின்றி, செயற்கைக்கோள் மற்றும் பிற விண்வெளி திறன்களை மேம்படுத்தவும் ரஷியாவுக்கு சீனா உதவி வருகிறது. உக்ரைனுக்கு எதிரான இந்த போரில் ரஷியாவுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்கியும் வருகிறது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.