சித்திரை புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமையட்டும்

பிறந்திருக்கும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

”பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டு இலங்கைவாழ் மக்களுக்கு சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்.

பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புத்தாண்டானது, சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு பண்டிகையாக உள்ளதுடன், நாட்டின் தேசிய கலாச்சாரமாகவும் திகழ்கிறது.

மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையும், இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான ஒரு வருடமாகவும் இப்புத்தாண்டு மலரட்டும்.

நாட்டை  வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த எமது நாடு இன்று  அதிலிருந்து மீண்டுவருகிறது. சமகால சூழலில் சரியான திசைவழி நோக்கி பயணிப்பதன் ஊடாக எமது மக்கள் எண்ணிய எதிர்கால இலட்சியங்களை எட்டிவிட முடியும்.

இந்த ஆழமான நம்பிக்கையோடு சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.“ எனவும் தமது வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.