ஸ்பெயின்: மத்திய தரைக்கடலில் மிதந்து வந்த படகில் 4 பெண்களின் சடலங்கள்

மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகு தத்தளித்தபடி மிதந்து வந்ததை கடற்படையினர் கண்டறிந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அதில் 4 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகை இன்று காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் இழுத்து வந்தனர்.

படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அங்கிருந்து புலம்பெயர்ந்து ஸ்பெயினில் குடியேறுவதற்காக படகில் வந்தபோது இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. அந்த படகில் வேறு யாரும் இல்லை. புறப்படும்போது வேறு யாரேனும் அவர்களுடன் வந்தார்களா? என்ற விவரமும் தெரியவில்லை.

மேற்கு ஆபிரிக்காவில் வறுமை, உள்நாட்டு சண்டை, மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை போன்ற காரணங்களால் அங்கிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், படகு மூலம் ஸ்பெயினுக்கு வர முயற்சிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலான மக்கள், திறந்தவெளி படகுகளில் அட்லாண்டி கடற்பகுதியில் உள்ள கேனரி தீவுகளுக்கு சென்று அங்கிருந்து வருகின்றனர். மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஸ்பெயினின் பிரதான பகுதிக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இவ்வாறு செல்லும்போது ஆபத்தான கடற்பயணத்தில் பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டில் மார்ச் 31-ம் தேதி வரை 15,351 புலம்பெயர்ந்தோர் படகு மூலம் ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்தவர்களைவிட 4,000 அதிகம் ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் கேனரி தீவு பாதையில் வந்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.