இருபுறமிருந்து தாக்கும் அதிமுக, பாஜக.பல முனைகளில் இருந்து வரும் கணைகளை எதிர்கொள்ளும் திமுக

ஆனால், தற்போது நடக்கும் தேர்தலில், இந்த பாஜக அரசை விமர்சிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆட்சி மாற்றத்துக்காக பேசுவதற்குப் பதிலாக மாநில அரசையே விமர்சித்துக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சியான அதிமுக. 

நடப்பது நாடாளுமன்றத் தேர்தலா, சட்டமன்றத் தேர்தலா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, பிரிந்திருப்பதாக வெளியே சொல்லிக் கொண்டாலும்கூட அதிமுக-வும் பாஜகவும் இரண்டு துருவங்களில் நின்று கொண்டு திமுக என்னும் ஒரே இலக்கையே தாக்கிக் கொண்டிருக்கின்றன. 

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்த நிலையில் இப்படி இங்கே விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை மிக மோசமான முறையில் கையாண்டதால், உலகிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் இந்தியாவில் நடந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஊருக்குப் போனார்கள். 

மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் சேர்ந்து சிறு, குறு தொழில்களை மோசமாக நலிவடையச் செய்திருக்கின்றன. 

இந்த தொழில்களை நம்பியிருந்த பல லட்சம் பேர் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வளர்ச்சி, வாய்ப்புகள் எல்லாம் அதானி, அம்பானி என்ற இரண்டு பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே போயிருக்கின்றன.

தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டு, ரெய்டு விடப்பட்டு அவர்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேர்தல் பத்திர நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. இந்த ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் பத்திர நன்கொடைக்கு பிரதிபலனாக, லட்சக்கணக்கான கோடி மதிப்புக்கு முறைகேடுகளை அனுமதித்துள்ளது பாஜக அரசு.  

துவாரகா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவிடப்பட்டதாக கணக்கு எழுதியது அம்பலமானது. இதுபோல, 7.5 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு முறைகேடு செய்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் டசோ நிறுவனத்தில் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைவிட கூடுதலான விலை கொடுத்து வெறும் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பேசி வாங்கியது பாஜக அரசாங்கம்.

அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் சிதைக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரங்கள் மூலம் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் நடவடிக்கைகள் வெட்கமின்றி ‘ஆபரேஷன் தாமரை’ என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன.

கொள்கை என்ற அளவில் பார்த்தாலும், குடியுரிமையில் மதப் பாரபட்சம் காட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பதிகாரம் தந்த உறுப்புரை 370 சர்ச்சைக்குரிய முறையில் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டன. அங்கே ஆறு ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் ஆளுநர் ஆட்சி நடக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட அதிகாரம் மிக்கவர்களாக தங்களைக் கருதிக் கொண்டு, சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களை நிறுத்திவைப்பது, மாநில அரசின் அதிகார எல்லையில் சாத்தியமான எல்லா வழியிலும் குறுக்கீடு செய்வது என்று செயல்படுகிறார்கள்.

மாநிலங்களின் வரி அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு, மத்திய  நிதியை ஒதுக்கீடு செய்வதில், மாநிலங்களுக்கு இடையில் கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இப்படி பாகுபாட்டுக்கு ஆளான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இவ்வளவு நடந்திருந்தும், பேசுவதற்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக-வும், வாக்கு சதவீதத்தில் நான்காமிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாம் தமிழர் கட்சியும் மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை மட்டுமே விமர்சிக்கின்றன. பத்தாண்டுகளாக பலவித கோளாறுகளை ஏற்படுத்திய பாஜக ஆட்சியை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்க்கின்றன. 

மேலே சொன்ன பிரச்சனைகளையெல்லாம் தமிழ்நாட்டின் தேர்தல் மேடைகளில் எங்கே கேட்க முடியும்? திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மேடைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகள் பேசப்படுவதைக் கேட்க முடியும். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னைகளை எல்லாம் தொட்டு விரிவாகப் பேசுகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்த விஷயங்களை விளக்கும் முதல்வர், தன் பேச்சுக்கு ஆதாரமாக புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார். பிரபலமான பத்திரிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார். சி.ஏ.ஜி. போன்ற அரசு அமைப்புகள் எழுதிய குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறார். 

ஆனால், பல அணிகளாகப் பிரிந்து தேர்தல் நடந்தாலும்கூட, பாஜக உறவை முறித்துக் கொண்டதாக அதிமுக கூறிக்கொண்டாலும்கூட பாஜக அரசை விமர்சிக்கும் பொறுப்பை அதிமுகவோ, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ பகிர்ந்துகொள்ளவில்லை. 

பதிலாக, பாஜகவின் முறைகேடுகளை, ஊழலை, நச்சுக் கோட்பாடுகளை, ஜனநாயக விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக மீது தாக்குதல் தொடுப்பதிலேயே பிசியாக இருக்கிறார் எடப்பாடி. 

பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று தரப்புமே திமுக என்னும் ஒரே இலக்கை நோக்கியே தாக்குதல் தொடுக்கின்றன. 

தன்னுடைய 3 ஆண்டுகால ஆட்சியில், நிதி நெருக்கடி, கொரோனா, வரலாறு காணாத வெள்ளம், ஒத்துழைக்காத ஒன்றிய அரசு என்று பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது திமுக அரசாங்கம். இவற்றுக்கு நடுவிலும் கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர் நலன் ஆகியவற்றுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது திமுக அரசாங்கம். மக்கள் மேம்பாட்டிலும், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியிலும் முதலீடு செய்வது என்ற திராவிட மாடல் கொள்கையை தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்ற இரண்டு வழிகளைப் பின்பற்றுகிறது. இரண்டுக்கும் தெளிவான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. 

பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என்று மூன்று தரப்பும் பேசி வைத்துக் கொண்டு செய்வதைப் போல இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறைத்து திமுகவை மட்டுமே தாக்கிப் பேசிக் கொண்டிருந்தாலும், அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களான தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் புரிகிறது. திமுகவும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும், தோழமை அமைப்புகளும் இந்தப் பிரச்னைகளை ஓயாமல் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வையும், ஓயாத பரப்புரைகளையும் துணையாகக் கொண்டே பலமுனை வியூகங்களை எதிர்கொள்கிறது திமுக அணி. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.