“எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜகவால் வளரவே முடியாது” – மு.க.ஸ்டாலின் @ காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: “பிரதமர் மோடி, இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜகவால் வளரவே முடியாது. பத்தாண்டுகளாக மத்தியில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில், வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை”, என்று காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஏப்.16) காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு , காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வந்தவுடன் தொழில்வளத்தைப் பெருக்க, தொழில் முனைவோர்களுடன் கூட்டம் நடத்தினேன். அதில் அவர்கள் கேட்டுக்கொண்டது, நம்முடைய இளைஞர்கள் வேலை பெற, திறன்பயிற்சி தேவை என்று சொன்னவுடன், அதற்கான திட்டத்தை உருவாக்க ஆணையிட்டேன். அப்படி உருவாக்கிய திட்டம்தான், ‘நான் முதல்வன் திட்டம்’.

அந்த திட்டத்தின் மூலம், இதுவரை 28 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி இருக்கிறோம். இதே போன்று, இன்னொரு புரட்சிகரத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இன்றைக்கு தமிழகம் முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள். இன்னும் சொல்லலாம், நிறைய இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள். இப்படி பார்த்துப் பார்த்து, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? நான் மத்திய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா? என்று கேட்கிறார். உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டயலாக் வருமே, ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’என்று அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பாஜக அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும். நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம். கோடிக்கணக்கான தமிழக மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே, அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது. இன்னொரு விருது காத்திருக்கிறது, ஜூன் 4-ஆம் தேதி “நாற்பதுக்கு நாப்பது”என்ற விருது.

பழனிசாமி அவர்களே, wait and see. நீங்கள் பாழ்படுத்திய நிர்வாகத்தைச் சரிசெய்து திமுக அரசு, தமிழகத்தை ‘நம்பர் ஒன்’மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழகம் எதில் எல்லாம் நம்பர் ஒன் தெரியுமா? பட்டுக்கும் – நெசவுக்கும் பெயர் போன காஞ்சி மண்ணில் சொல்கிறேன். ஜவுளித் துணிகள் ஏற்றுமதி, ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஏற்றுமதி, ஏற்றுமதி ஆயத்தநிலைக் குறியீட்டில், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பில், 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் நம்பர் ஒன், இப்போது நான் சொன்னது எல்லாம் நாங்கள் எடுத்த புள்ளிவிவரம் இல்லை, மத்திய அரசின் புள்ளிவிவரம்.

பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14-வது இடத்தில் இருந்த தமிழகத்தை, திமுக அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றி இருக்கிறோம். அமைச்சர் தா.மோ அன்பரசன் இருக்கிறார். அவரது துறையில், ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக் காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழகத்தை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.

எந்த சமூக, பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும். பழனிசாமி அவர்களே, நீங்கள் எதில் ‘நம்பர் ஒன்’தெரியுமா? பதவி சுகத்துக்காக தமிழக உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ‘நம்பர் ஒன்’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர்களுக்கு, பாஜகவுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே, அதுமட்டுமல்ல, பாஜக இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அதிமுக அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்த பச்சோந்திதான், இந்தப் பழனிசாமி. அதிமுகவும் – பாஜகவும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி.

இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி. இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அதிமுக சில இடங்களில் வென்று பாஜகவுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்” என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்” என்று வாய்தா வாங்கியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் அவரின் பாஜக எதிர்ப்பு லட்சணம்.

எங்கேயாவது “பாஜக எங்கள் கொள்கை எதிரி” என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று ஏன் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால், முதுகு வளைந்து பாதம் தாங்கும் பழனிசாமியால் ஒருபோதும் பாஜகவை எதிர்க்க முடியாது என்பதே உண்மை. அதிமுகவுக்குப் போடும் வாக்கு என்பது, பாஜகவுக்கான வாக்குதான். பழனிசாமியின் பகல் வேஷங்களும், பச்சைப்பொய்களும் இனி தமிழக மக்களிடம் எப்போதும் எடுபடாது. இப்போது, நாட்டு மக்கள் இந்தியாவின் எதிர்காலம் இண்டியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில், இருக்கிறார்கள்.

இண்டியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களிடம் இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிப் பெற்றுள்ள நம்பிக்கை இது. திமுக – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்தியில் எத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறோம். பெரிய பட்டியலே இருக்கிறது. உதாரணத்துக்கு நம்முடைய டி.ஆர்.பாலு, மூன்று முக்கியமான துறைகளில் மத்தியில் அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை மட்டும் சொல்லலாமா?

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பாலு இருந்தபோது, தமிழகத்துக்கு மட்டுமே 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழகத்துக்கு கொண்டு வந்தார். கப்பல் –தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தன.

இதுமட்டுமா, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், பாடி பாலம். அதுமட்டுமல்ல, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே, 335 பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறோம். அதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி ‘பாலம்’பாலு என்று அழைத்தார். இதுபோன்ற சாதனைகள் தொடர, மத்தியில் நாம் ஆட்சியில் இருக்கவேண்டும். அதற்காகத்தான், இந்த தேர்தலின் ஹீராவான தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிரசும் வெளியிட்டிருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது.

ஆனால், மிக உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பிரதமர் மோடி எல்லாக் கூட்டங்களிலும் மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியலை செய்துகொண்டு இருக்கிறார். சாதி, மதம், உணவு என்று மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்றுதான், மோடியின் மூளை சதாசர்வ காலமும் சிந்திக்கிறது. இப்படி மக்களைப் பிளவுப்படுத்தச் சிந்திப்பதில் ஒரு விழுக்காடாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்து இருக்கிறாரா, மோடி? சிந்தித்து இருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா? வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில், எல்லாத் தரப்பு மக்களுக்கும் போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டதே. தனிமனிதர்கள் தொடங்கி மாநிலங்கள் வரை, எல்லோரையும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட போராட வைத்திருக்கிறார்.

12 ஆண்டு காலம் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்குப் பிரதமர் ஆனதும், மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. பிரதமர் ஆனவுடன் என்ன சொன்னார்? “மாநில முதல்வராக இருந்ததால், எனக்கு மாநிலங்களின் பிரச்சினையும் தெரியும். தேசத்தின் பிரச்சினையும் தெரியும்”என்று சொன்னார். ஆனால், என்ன செய்கிறார்? ஆளுநர்களை வைத்து, மாநிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையைக் கொடுப்பதே மோடிதான். ஒட்டுமொத்த தேசத்துக்கும், பிரதமர் மோடிதான் மிகப்பெரிய பிரச்சினை.“பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று அண்ணா சொல்லுவாரே, அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்.

பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பே இருக்காது. ‘நாரி சக்தி’என்று பெண்களை மதிப்பதாக வீரவசனம் எல்லாம் பேசுவார். மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனச்சாட்சி இருக்கும் யாரும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள். அந்த பெண்களுக்கான நீதி எங்கே? குஜராத் வன்முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு போராடிப் பெற்ற நீதியைக் கூட, குற்றவாளிகளின் விடுதலை மூலமாகக் கொச்சைப்படுத்தியது தான் பாஜக.

காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே குழந்தை ஆசிஃபாவை சீரழித்து கொன்றுவிட்டு அந்த குற்றவாளிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற கேடுகெட்ட கொடியவர்கள் இருக்கும் கட்சிதான் பாஜக.
நாட்டுக்கு பெருமைதேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளி உலகத்துக்குச் சொல்லி, நியாயம் கேட்டபோதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியதுதான் பாஜக. இதுதான் ‘நாரி சக்தி’ என்ற முகமூடிக்குப் பின்னால் இருக்கும் உண்மை முகம்.

ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் ஓதுவார்கள் ஆகியிருக்கிறார்கள். அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறார்கள். அதற்கு ஒரு படி மேல் போய், தமிழகத்தின் புகழ்பெற்ற கோயிலான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜனை நியமித்திருக்கிறோம். இப்படி முற்போக்குச் சிந்தனைகளோடு முன்னேறிக்கொண்டு இருக்கும் திராவிட மாடலைப் பார்த்தால் அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.

பிரதமர் ஆனதும் மாநிலங்களை சுத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு, மறைமுகமாக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டியவர்தான் மோடி. இதை இந்தத் தனிப்பட்ட ஸ்டாலின் சொல்லவில்லை. இண்டியா கூட்டணி தலைவர்கள் சொல்லவில்லை. மோடி அரசில் நிதி ஆயோக் தலைமை அதிகாரியாக இருக்கும் B.V.R.சுப்பிரமணியமே சில மாதங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தினார். மோடி பிரதமர் ஆனதும், மாநிலங்களுக்குப் போகும் நிதியை எப்படி குறைக்கலாம், அதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று, மோடி சதித்திட்டம் தீட்டியதாக அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் மாநிலங்கள் மேல் மோடிக்கு இருக்கும் போலி பாசம்.

அடுத்து ஒன்று சொன்னார்.டெல்லியில் இருக்கின்றவர்கள், மாநிலங்களை ஆளக்கூடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு எல்லா அதிகாரங்களையும் டெல்லியில் மத்திய அரசிடம் குவித்து, மாநில அரசுகளை நகராட்சிகளாக மாற்ற முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். வரி விதிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடம் இல்லை. இதையெல்லாம் விட மோசமான செயல், அதிகாரிகளை நியமிக்க, டிரான்ஸ்பர் செய்யக் கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அதைத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகச் செய்தார்.

அரசு உயரதிகாரிகள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதும், அதை எதிர்த்து, “டெல்லி சர்வீசஸ் பில்” கொண்டு வந்தார். மாநில அரசின் முக்கிய அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநர் என்ற நியமனப் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.
அதுமட்டுமா! பிரதமர் ஆவதற்கு முன்பு, “மாநிலங்களைப் பழிவாங்க மாட்டேன்”என்று சொன்னார் மோடி. ஆனால், நாட்டில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டணி முயற்சி எடுப்பார். முடியவில்லை என்றால், அந்தக் கட்சிகளை உடைக்கப் பார்ப்பார்.

அந்த கட்சிகளின் எம்எல்ஏக்களை குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவார். தன்னுடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பணியாத முதல்வர்கள் மேல், சகட்டுமேனிக்கு ஊழல் குற்றச்சாட்டு வைப்பார். CBI,IT,ED போன்ற அமைப்புகளை வைத்து, தொல்லை செய்வார். அப்போதும் அவர்கள் உறுதியாக நின்றால், அவர்களைக் கைது செய்து பழிவாங்குவதில் மும்முரமாக இருக்கிறார். மோடியின் ஊழலுக்கு பணிந்துவிட்டால், உடனே, “மேட் இன் பிஜேபி” வாஷிங் மெஷினை எடுத்து வெளுத்து சுத்தமாக்கி, உலக யோக்கியர் என்று பட்டம் கொடுப்பார். இந்த லட்சணத்தில், மாநிலங்கள் மேல் அக்கறை இருப்பது போன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

இதே காஞ்சிபுரமும், சென்னையும் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அதற்கு ஒரு ரூபாயாவது மத்திய அரசு நிவாரணமாகத் தந்ததா? நானே நேரில் சென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். “இதோ தருகிறேன்”என்று சொன்னார். தமிழக எம்.பிக்கள் எல்லாம், டி.ஆர். பாலு தலைமையில் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்கள். அவரும், “இதோ தருகிறேன்” என்று சொன்னார். ஆனால், இன்று வரை நிதியைத் தரவில்லை. மாநில முதல்வரான என்னிடமே, பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி.

இப்போது நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறோம். இனியும் மாநில உரிமைகள் பற்றியோ, கூட்டுறவுக் கூட்டாட்சி பற்றியோ, பிரதமர் மோடி பேசலாமா? அவருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கிறதா? நாங்கள் மட்டும் இல்லை, வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் வாங்க அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றப் படி ஏறி இருக்கிறது. வறட்சி நிவாரணம் கேட்டு கர்நாடகம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் நீதிக்காகவும் – நிதிக்காகவும் நீதிமன்றப் படி ஏற வைத்தவர்தான் பிரதமர் மோடி.

அதனால்தான் சொன்னேன், மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள்? இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜகவால் வளரவே முடியாது.

நாடு முழுவதும் பாஜக ஜெயித்த 2014, 2019 தேர்தலிலே பாஜகவை ஓரங்கட்டிய தமிழக மக்கள், நாடு முழுவதும் நீங்கள் தோற்பது உறுதியாகி இருக்கும் இந்தத் தேர்தலில் உங்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள்? பத்தாண்டுகளாக மத்தியில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில், வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் கூட்டணிக்கு உங்கள் கட்சியில் ரவுடிகளையும் கலவரம் செய்யும் எக்ஸ்பெர்ட்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் பாஜக எப்படி வளரும்? நீங்கள்தான் எப்போதும் மக்களை ஏமாற்றுவீர்கள் என்று பார்த்தால், இப்போது உங்களையே யாரோ தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என ஏமாற்றுகிறார்கள்.

அடுத்து இன்னொரு பொய்யைச் சிரிக்காமல் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. காசி தமிழ் சங்கமத்தில் உத்தரப் பிரதேசம் சென்ற நம்முடைய மக்கள், அங்கு நடந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்களாம். அதற்கு யாரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நாம் நாளிதழ்களில் படித்து ஆதங்கப்பட்டது, உ.பி முதல்வர் யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், 60 குழந்தைகள் இறந்ததன. மனித வளக் குறியீடு, ஊட்டச்சத்து, சட்டம் – ஒழுங்கு, தனிநபர் வருமானம் என்று எல்லாவற்றிலும் தமிழகத்தின் இடம் என்ன? பாஜக ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலை என்ன? இதெல்லாம் எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் உங்கள் மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.

பத்தாண்டுகளாக நாட்டை பாழ்படுத்திய நிலை இனியும் தொடரக் கூடாது. “வேண்டாம் மோடி”என்று ஒட்டுமொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். வரலாறுகள் திரித்து எழுதப்படும். அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும். மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும். மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும். அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்எஸ்எஸ் சட்டம் நாட்டை ஆளும்.

இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான். இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல, நாடு காக்க இன்றே தயாராகுங்கள். பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழக எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழக துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழகத்தை வஞ்சித்த பாஜக – தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள்”,என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.